சேலம் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பழைய பாலத்தின் மீது ஏறி ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுக்கும் இளைஞர்கள்!
சேலம் மேட்டூர் அணையில் இருந்து உபரிநீராக 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு கூடுதல் எச்சரிக்கைவிடும் நடவடிக்கையில் பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே காவிரி ஆற்றங்கரை பகுதியில் பொதுமக்கள் புகைப்படம் எடுக்கவும், வேடிக்கை பார்க்கவும் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர்.
இதனால் எந்தவித அசம்பாவிதம் ஏற்படாமல் இருப்பதற்கு காவல்துறையினர் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதனிடையே மேட்டூர் நகர் பகுதிகளுக்கு குடிநீர் எடுத்துச் செல்லும் குழாய் காவிரி ஆற்றின் குறுக்கே பழைய பாலத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது.இந்தப் பாலத்தின் மீது இளைஞர்கள் ஆபத்தை உணராமல் ஏறி நின்று புகைப்படம் எடுத்து வருகின்றனர். இளைஞர்கள் ஒருவருக்கு ஒருவராக மேலே ஏறி புகைப்படம் எடுத்து வருவது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.