பாராமரிய கொசு ஒழிப்பு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை 

0
251
Mosquito Control by Natural Medicine
Mosquito Control by Natural Medicine

பாராமரிய கொசு ஒழிப்பு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை

தமிழக அரசின் சார்பில் செயல்பட்டு வந்த பாரம்பரிய முறையில் கொசு ஒழிப்புக்காக பொதுமக்களுக்கு நொச்சி நாற்று வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது

மழை உள்ளிட்ட பருவ கால மாற்றங்களின் போது பொதுமக்களுக்கு, டைபாய்டு, டெங்கு, சிக்கன் குனியா போன்ற பல வகையான காய்ச்சல் பரவுவது இயல்பு. அது போன்ற சமயங்களில் அதிகரிக்கும் கொசு காரணமாக அருகிலுள்ளவர்களுக்கு நோய் பரவும் தன்மையும் அதிகரிக்கிறது.

அந்த வகையில் இவ்வாறு பரவ காரணமாக உள்ள கொசுக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தினால், அதன் மூலமாக டெங்கு உள்ளிட்ட பலவிதமான நோய் பரவலையும் தடுக்க முடியும். இந்நிலையில் கொசுக்களை கட்டுப்படுத்த பல்வேறு முறைகள் கையாளப்பட்டாலும், பக்கவிளைவு இல்லாமல் மூலிகை வளர்ப்பால் கொசுக்கள் பெருக்கத்தை தடுக்க முடியும்.

இதற்காக வீடுகளை சுற்றிலும் நொச்சி செடியால் உயிர்வேலி அமைக்கும் வழக்கத்தை, நம் முன்னோர் பாரம்பரியமாக கடைப்பிடித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் அடிப்படையில் வீட்டில் நொச்சி செடி வளர்ப்பதன் நன்மைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்கள் வாயிலாக அரசு திட்டமிட்டது. இதற்காக, ஊராட்சிகளில் நாற்றுப் பண்ணை அமைத்து, நொச்சி நாற்று உற்பத்தி செய்து கிராமங்களில் நடவு செய்யும் திட்டம் கொரோனா பரவலுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் மூலமாக அரசு சார்பில் பொதுமக்களுக்கு கட்டி தரப்படும் தொகுப்பு வீடுகள் திட்ட பயனாளிகளுக்கு, தலா இரண்டு நொச்சி நாற்றுகள் வழங்கப்பட்டன.ஆனால், கொரோனா காரணமாக நொச்சி வளர்ப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

தற்போது, அவ்வப்போது மழை பெய்வதால், கொசுக்கள் உற்பத்தி மற்றும் நோய் பரவும் சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், நொச்சி உள்ளிட்ட மூலிகை செடிகள் வளர்க்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும். விரைவில், முழு வீச்சில் நொச்சி நாற்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Previous articleவிவசாயிகளுக்கு பயனுள்ள குறைந்த வாடகையில் வேளாண் கருவிகள் பொருத்தப்பட்ட டிராக்டர்கள்
Next articleதூத்துக்குடி மாவட்டத்தில் பெண்ணிற்கு அரங்கேறிய சம்பவம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!