சொகுசு கார் வாங்கிய சர்ச்சையில் சிக்கும் திமுகவின் முக்கிய அமைச்சர்! குழப்பத்தில் தலைமை
இந்தியாவில் முறையான விற்பனைக்கு வராத டொயோட்டா லேண்ட் க்ரூஸர் சொகுசு காரை திமுகவின் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வாங்கி இருப்பது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் பல்வேறு கார்களை உற்பத்தி செய்யும் டொயோட்டா நிறுவனத்தின் புகழ் பெற்ற மாடல்களில் ஒன்று லேண்ட் க்ரூஸர். அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் பலரின் சாய்சாக இருப்பது தான் இந்த லேண்ட் க்ரூஸர். அந்த வகையில் பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உள்பட பல தலைவர்களின் விருப்பமான காராக லேண்ட் க்ரூஸர் இருந்து வருகிறது.
பல்வேறு சிறப்பு அம்சங்களும், அதிக சொகுசு மற்றும் அதி நவீன் தொழில் நுட்ப வசதிகளை கொண்ட இந்த காரின் மைலேஜ் மிகவும் குறைவே. அதாவது ஒரு லிட்டர் டீசலுக்கு வெறும் 4 கிலோ மீட்டர் மட்டுமே. தற்போது இந்த லேண்ட் க்ரூஸர் எல்.சி.300 மாடலை சஹாரா வெர்ஷனில் விரைவில் டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் களமிறக்க உள்ளது.
புதிய மாடலில் ஏற்கனவே இருப்பதுடன் கூடுதலாக சில அம்சங்களை சேர்த்துள்ளதோடு, செமி கண்டக்டர் டிமாண்ட் இருப்பதால் இந்த காரை போதிய அளவில் உற்பத்தி செய்ய முடியாமல் டொயோட்டா நிறுவனம் திண்டாடி வருகிறது. கொரோனா கால கட்டத்தில் உலக தொழில்துறையே தள்ளாட்டம் கண்ட போது அதனுடன் சேர்ந்து கார்களுக்கு தேவையான செமி கண்டக்டர் தயாரிப்பும் தள்ளாடியது. அதன் காரணமாகவே தற்போது இந்த லேண்ட் க்ரூஸர் எல்.சி.300 மாடலை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கொண்டு வர டொயோட்டா திட்டமிட்டுள்ளது.
இவ்வளவு சிறப்புமிக்க இந்த காரின் விலை சுமார் 2 கோடி ரூபாய் என்றாலும் பணத்தை கொடுத்தவுடன் கார் கிடைத்துவிடாது என்பதும் இந்த காரின் மீதான ஈர்ப்புக்கு ஒரு காரணம் என்றேசொல்லப்படுகிறது. லேண்ட் க்ரூஸர் காரை புக் செய்துவிட்டு அதை கையில் வாங்குவதற்கு ஏற்கனவே இருக்கும் 6 மாத காத்திருப்பு காலம் தற்போது 4 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால் லேண்ட் க்ரூஸர் எல்.சி.300 காரை இந்தியாவில் விற்பனை கொண்டு வர இருப்பதாக இன்னும் அறிவிப்பை கூட டொயோட்டா நிறுவனம் வெளியிடாமல் இருக்கிறது.
இந்நிலையில் இவ்வளவு டிமாண்ட் இருக்கும் இந்த காரைத்தான் தற்போது திமுகவின் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வாங்கி கெத்தாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். பொதுவாக சொகுசு கார்களை வாங்குவதை பொறுத்தவரையில் இரண்டு வகை உள்ளது. அந்த வகையில் வெளிநாடுகளிலேயே முழுவதுமாக கட்டமைக்கப்பட்டது அல்லது உதிரி பாகங்களை கொண்டு வந்து நம் நாட்டில் கட்டமைப்பது.
கார்களுக்கான உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கான வரி குறைவு என்பதால் பல கார்கள் இரண்டாவது முறைப்படி தான் இந்தியாவில் தயார் செய்யப்படுகிறது. ஆனால், சொகுசு கார்கள் முழுவதுமாக கட்டமைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படுவதால் கார் விலைக்கு இணையாக இறக்குமதி வரியையும் செலுத்த வேண்டும்.
அதாவது 2 கோடி மதிப்பிலான காரை இறக்குமதி செய்தால் அதே 2 கோடி ரூபாயை வரியாக அரசுக்கு செலுத்த வேண்டும். அப்படி செய்வதன் மூலம் அந்த காரின் மொத்த விலை 4 கோடி ரூபாய் என உயர்ந்து விடுகிறது. அதன் பிறகு பதிவு கட்டணம், மாநில அரசு வரிகள், காப்பீட்டு கட்டணம் என மேலும் பல லட்சம் இதற்கு செலவாகும் என்று கூறப்படுகிறது.
இவ்வளவு செலவு இருப்பதாலே பலரும் வெளிநாட்டில் முழுவதுமா கட்டமைக்கப்பட்ட கார்களை இறக்குமதி செய்ய தயங்குகின்றனர். ஆனால், பல பிரபலங்கள் எல்லோருக்கும் முன்பாக நாம் அந்த காரை பயன்படுத்தி விட வேண்டும் என்ற ஆர்வத்தில் பல கோடிகளை செலவு செய்யவும் தயாராகி விடுகின்றனர்.
அந்த வகையில் தான் இந்த டொயோட்டா நிறுவன காரின் மீது அதிக ஆர்வம் கொண்ட அமைச்சர் நேரு தற்போது அந்த டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்.சி.300 மாடல் காரில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்தியாவில் விற்பனைக்கே வராத இந்த காரை அமைச்சர் எப்படி வாங்கினார் என்ற சர்ச்சையும் எதிர் தரப்பில் கிளம்பியுள்ளது. இதை திமுக தலைமை எப்படி கையாள போகிறது என்ற குழப்பமும் அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.