உச்சத்தில் ஏர்டெல்-ஜியோ மோதல்: கொண்டாட்டத்தில் பயனாளிகள்
ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் ஒன்றை ஒன்று போட்டி போட்டுக்கொண்டு சலுகைகள் வழங்கி வருவதால் இரு நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் கொண்டாட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஜியோ நிறுவனம் அறிமுகம் ஆன பின்னர் தனியார் தொலைத் தொடர்புத் துறையின் ஒரு சில நிறுவனங்கள் தள்ளாட்டத்தில் இருந்தன. குறிப்பாக ஏர்செல் நிறுவனம் தனது நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டு சென்று விட்டது. இந்த நிலையில் ஜியோ நிறுவனத்திற்கு ஈடு கொடுத்து வரும் ஒரே நிறுவனமாக ஏர்டெல் இருப்பதாக கூறப்படுகிறது.
ஜியோ நிறுவனத்தின் போட்டியை சமாளிக்க அவ்வப்போது அசத்தலான திட்டங்களை அறிவித்து வரும் ஏர்டெல், சமீபத்தில் வைஃபை காலிங் என்ற வசதியை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் நெட்வொர்க் இல்லாத அல்லது நெட்வொர்க் சரியாக இல்லாத இடத்தில் இருந்தும் இந்த வசதியை பயன்படுத்தி கால் செய்யலாம் என்பதுதான் இந்த புதிய சேவையின் முக்கிய அம்சம்.
இந்த நிலையில் ஏர்டெல்லின் இந்த அறிவிப்பை அடுத்து ஜியோவும் கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு வசதியை அறிவித்துள்ளது. இந்த சேவையின் பெயர் ‘ஓவர் ஃவைபை வசதி’. இந்த வசதியை பயன்படுத்தி மோசமான சூழ்நிலையில் இருக்கும் வாடிக்கையாளர்கள் உதவியைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த வசதி தற்போது சோதனை பயன்பாட்டில் இருப்பதாகவும் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு ஒரே விதமான வசதியை அளித்துள்ளது இரு நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு உண்மையிலேயே கொண்டாட்டம்தான்.