கோயமுத்தூர் வடவள்ளி அடுத்த பொம்மணாம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியில் 80 வயதான பெரிய ராயப்பன் தன்னுடைய மனைவி ராஜம்மாளுடன் வசித்து வந்தார். இவர்களுடைய மகன் சென்னையில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவர்களுடைய மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டதாக சொல்லப்படுகிறது.
வீட்டில் கணவன் மனைவி மட்டுமே வசித்து வந்தனர் சம்பவத்தன்று ராஜம்மாள் மருத்துவமனைக்கு சென்று விட்டார். இந்த சூழ்நிலையில், சுமார் 2 மணி அளவில் கையில் பொது அறிவு புத்தகத்துடன் முதுகில் பை ஒன்றை மாட்டிக்கொண்டு இளைஞர் ஒருவர் இளம்பெண்ணுடன் பெரியராயப்பன் வீட்டிற்கு சென்று தாகமாக இருப்பதாக தெரிவித்து குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.
தண்ணீர் எடுத்து வருவதற்காக உள்ளே சென்ற முதியவரை பின்தொடர்ந்து சென்று வீட்டிற்குள் அவரை மடக்கி பிடித்து இரு கைகளையும் கட்டி வாயில் கிளாஸ்டரை ஓட்டி சமையலறையில் தள்ளிவிட்டுள்ளார்கள். அதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்த பீரோ மற்றும் பல பகுதிகளில் பணம் நகைகளை தேடி வீட்டை அலசி இருக்கிறார்கள். நீண்ட நேரத்திற்கு பிறகு வீட்டில் கிடைத்த பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு வீட்டின் பின்புற கதவு வழியாக வெளியேறியிருக்கிறார்கள்.
அந்த சமயத்தில் சென்னையிலிருந்து வந்த முதியவரின் மருமகள் சங்கீதா வீட்டின் பின்புறமாக சென்ற அந்த கொள்ளைக்கார இளம் ஜோடியை பிடித்து விசாரித்த போது இருவரும் அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். சங்கீதா திருடன், திருடன், என கூக்குரலெழுப்ப ஊரே திரண்டு வந்து அவர்களை விரட்டி உள்ளது. அந்த திருட்டு ஜோடியில் ஓட இயலாத பெண் ஒரு புதறில் பதுங்கி இருந்தபோது வசமாக சிக்கிக் கொண்டார்.
தன்னுடன் வந்த பெண் பிடிபட்டதை கண்டு கொண்ட அந்த இளைஞர் தானாக திரும்பி வந்து பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டார். வீட்டிற்குள் ராயப்பன் வாயில் பிளாஸ்டிக் டேப் ஒட்டப்பட்ட நிலையில் கிடந்ததை பார்த்து ஆவேசமடைந்த மக்கள் சிக்கிய இருவரின் கைகளையும் கயிற்றால் கட்டி தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், அந்தப் பெண் திருச்சியை சார்ந்த தேவராஜ் மகள் சிங்காநல்லூர் செண்பகவல்லி என்பதும், அந்த இளைஞர் கிருஷ்ணகிரியைச் சார்ந்த திருடன் தினேஷ்குமார் என்பதும், தெரியவந்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி காதலில் விழுந்த இவர்கள் உல்லாசமாக ஊர் சுற்றுவதற்காக வயதான முதியவர்களை ஏமாற்றி அவர்களுடைய வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்தி நகை ,பணத்தை, கொள்ளையடித்து தங்களுடைய கைவிரசையை காட்டி வந்தது தெரிய வந்தது.
பட்டதாரியான இவர்கள் கொள்ளையடிப்பது எப்படி என யூடியூப் வீடியோ பார்த்து முயற்சி செய்தபோது அதற்கு சரியான ஆயுதங்களான சுத்தி, கயிறு, பிளாஸ்டர் , உலி,திருப்புலி, உள்ளிட்டவற்றை வாங்கி பையில் வைத்துக் கொண்டு வீடு புகுந்து கொள்ளையடித்து வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். திருடன் தினேஷ்குமாரின் இருசக்கர வாகனத்தை கைப்பற்றிய காவல் துறையினர் அவரிடமிருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட நம்பர் பிளேட்டுகளை பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
இவர்கள் புத்தகம் விற்பதைப் போல ஒரு ஊருக்குள் நுழைந்து ஒரு வார காலம் நோட்டமிட்டு ஆள் நடமாட்டம் அறிந்து கொண்டு கொள்ளையடிப்பது வழக்கம் என சொல்லப்படுகிறது. வேறு எங்கெல்லாம் இந்த திருட்டு ஜோடி கைவிரசையை காட்டியிருக்கிறது என்பது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.