இந்திய பொருளாதாரம் குறித்து பிரதமர் மோடியின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் கூறிய அதிர்ச்சி தகவல்
இந்திய பொருளாதாரம் பற்றி பொருளாதார ஆலோசகர்கள் மற்றும் பங்கு சந்தை ஆலோசகர்கள் என பலரும் பல விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இவர்கள் அனைவரும் பல்வேறு கருத்துக்களை கூறினாலும் முடிவாக அனைவரின் ஒட்டு மொத்த கருத்தாக இந்திய பொருளாதாரம் மேலும் சரியும் என்பதே முடிவாக அமைகிறது.
அதாவது இந்திய பொருளாதார ஆலோசகர்கள், பங்கு சந்தை நிபுணர்கள் மற்றும் சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்கள் என எதுவாக இருந்தாலும் வீழ்ச்சி, சரிவு, மந்தம் என வார்த்தைகள் மட்டுமே அவர்களிடமிருந்து மாறி வருகின்றன. ஆனால் இதன் ஒட்டு மொத்தமானவெளிப்பாடு என்பது இந்திய பொருளதாரம் வீழ்ச்சி கண்டு வருகிறது என ஒன்றாகத் தான் இருக்கிறது.
இந்நிலையில் இதையெல்லாம் உறுதி செய்யும் வகையில் பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகர் குழுவில் இடம் பெற்றிருந்த, 16-வது பொருளாதார ஆலோசகரானஅரவிந்த் சுப்பிரமணியன் கூறியுள்ள கருத்து மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பொருளாதாரம் குறித்து அவர் கூறியுள்ளதாவது.
இந்திய வங்கிகளில் நிலவி வரும் கடுமையான நெருக்கடி காரணமாக, இந்திய பொருளாதாரம் கடுமையான மந்த நிலையை சந்தித்துள்ளது. இதனால் இந்திய பொருளாதாரம் ICU க்கு செல்கிறது. முதல் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் விலகினார். இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் இந்திய முன்னாள் அலுவலகத்தின் தலைவர் ஜோஷ் பெல்மனுடன் இணைந்து இந்திய பொருளாதாரம் குறித்து அவர் எழுதிய புதிய ஆய்வறிக்கையில், இந்தியா நான்கு சவால்களை எதிர்கொள்வது குறித்து கூறியுள்ளார்.
இவர் குறிப்பிட்ட சவால்களில் வங்கிகள், உள்கட்டமைப்பு மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் மோசமான வட்டி வளர்ச்சி உள்ளிட்ட மோசமான பிரச்சனைகளில் சிக்கியுள்ளன. ஆக இது ஒரு சாதாரண மந்த நிலை இல்லை என்றும் தெரிகின்றது. இது இந்தியா பொருளாதாரத்தின் கடுமையான மந்த நிலை ஆகும். இதனால் இந்திய பொருளாதாரமானது தீவிர சிகிச்சைப் பிரிவை நோக்கிச் செல்கின்றது என்றும் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் சர்வதேச மேம்பாட்டு மையத்தின் வரைவுப் பணியில் அரவிந்த் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்கள்:
கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய பெரிய அளவிலான கடன்களை திருப்பிக் கட்டாத நிலையில், வங்கிகளில் வாராக்கடன் அளவு அதிகரித்துள்ளது. மேலும் உலகளாவிய அளவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால், இந்திய பொருளாதாரம் மேலும் வீழ்ச்சி கண்டு வருகிறது. இதனால் முதலீடுகள் மற்றும் ஏற்றுமதிகள் சிதறடிக்கப்பட்டதால், இந்தியாவின் நீண்டகால வளர்ச்சியானது பெருமளவு குறைந்து விட்டது. மேலும் பொருளாதார நுகர்வும் குறைந்துள்ளது. இதனால் கடந்த சில காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி மிக விரைவாகவே வீழ்ச்சி கண்டு வருகிறது.
தற்போதுள்ள இந்த நிலையிலேயே இந்திய பொருளாதாரமானது ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஏறக்குறைய 4.5 சதவிகிதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. அதிலும் தொடர்ந்து தற்போது ஆறாவது காலாண்டாக இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு வருகிறது. மேலும் பெரிய அளவிலான கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் அளவில் கடன்பட்டுள்ள நிலையில், அதனுடைய உற்பத்தி விகிதமும் வீழ்ச்சியடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் சரிந்து வரும் பொருளாதாரத்தை சரி செய்யவும்,தெளிவான பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும், விரைவான வளர்ச்சியின் பாதையில் இந்திய பொருளாதாரம் திரும்பவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இதில் அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போதைய சூழ்நிலைகளில் மத்திய அரசின் பொருளாதார கருவிகள் பயனுள்ளதாக இல்லை. ஆக மோடி தலைமையிலான மத்திய அரசு விரைவில் போதுமான நடவடிக்கைகளை இதற்காக எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.