முகத்தை பளபளப்பாக்கும் கொத்தமல்லி இலை ! நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்!
பெண்கள் எப்பொழுதும் முக அழகிற்கு தனி கவனம் செலுத்துவார்கள். முகத்தில் முகப்பரு கருவளையம் தழும்புகள் இதுபோன்று ஏதேனும் ஒன்று இருந்தால் கூட அதற்கென தனி கவனம் செலுத்தி முகத்தை பராமரிப்பதில் முதலிடம் பெண்கள் தான். அந்த வகையில்
தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவி வந்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும்.
புதினா மற்றும் கொத்தமல்லி இலை அரைத்து தினமும் உதட்டில் தடவி வந்தால் உதடு சிவப்பாக மாறும். உங்களுக்கு மென்மையான பட்டுப் போன்ற சருமம் வேண்டுமெனில், ஓட்ஸ், பால், வெள்ளரிக்காய் சாறு மற்றும் சிறிது கொத்தமல்லி சாற்றினை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
மூக்கைச் சுற்றி கரும்புள்ளிகள் இருந்தால், கொத்தமல்லி சாறு சிறிது மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ, கரும்புள்ளிகள் நீங்கும்.
சிலருக்கு முகத்தில் சிவப்பு நிற தடிப்புக்கள் ஏற்படும். இந்த பிரச்சினையில் இருந்து விடுபட கொத்தமல்லி சாறு, தக்காளி சாறு மற்றும் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவவும்.
தினமும் இரவில் படுக்கும் முன், கொத்தமல்லி இலை சாற்றினை உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். இன்னும் சிறப்பான பலனைக் காண அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் கலந்து பயன்படுத்துங்கள்.
சிறிது கொத்தமல்லி இலைகள், தயிர் மற்றும் கற்றாழை ஜெல்லை சரிசமமாக எடுத்துக் கொண்டு நன்கு அடித்து, பின் அதில் சிறிது அரிசி மாவு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ, சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்கும்.