கட்சியை உடைத்து பாஜகவில் சேர துணை முதல்வருக்கு அழைப்பு – வெளியான பகீர் தகவல்
டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சியை உடைத்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தால் வழக்கு அனைத்தும் ரத்து செய்யப்படும் என பாஜக தரப்பிலிருந்து பேரம் பேசப்பட்டதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக தன்னை நிலைநிறுத்தி கொள்ள ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.அந்த வகையில் டெல்லியில் ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி தற்போது பஞ்சாப் மாநிலத்திலும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.இதனைத்தொடர்ந்து குஜராத் மாநிலத்தை கையில் எடுத்து ஆட்சியை கைப்பற்றும் வகையில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.
குஜராத் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசின் மீது அதிருப்தி நிலவி வருவதால் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்ற ஆம் ஆத்மி கட்சி முனைப்பு காட்டி வருகிறது.ஏற்கனவே உட்கட்சி பிரச்சனையால் சிக்கி தவிக்கும் காங்கிரஸ் கட்சி இந்த போட்டியிலிருந்து சற்றே விலகியே இருப்பது போல் சூழல் உள்ளது.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் வேகத்தை கட்டுப்படுத்து மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக பல்வேறு தடுப்புகளை போட்டு வருகிறது.அந்த வகையில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இலக்கு வைக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் புதிய மதுபான கொள்கையின் மூலம் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் டெல்லி துணை முதல்வரான மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான பல இடங்களில் சிபிஐ சோதனையில் ஈடுபட்டது. இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதன் காரணமாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யயப்பட்டு, மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில்,, முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜக மீது குற்றசாட்டை வைக்கும் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ஆம் ஆத்மி கட்சியை உடைத்துவிட்டு பாஜகவில் சேருமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அவ்வாறு பாஜகவில் இணைந்தால் அனைத்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குகளும் ரத்து செய்யப்படும் என பேரம் பேசப்பட்டதாகவும் குற்றசாட்டியுள்ளார்.
मेरे पास भाजपा का संदेश आया है- “आप” तोड़कर भाजपा में आ जाओ, सारे CBI ED के केस बंद करवा देंगे
मेरा भाजपा को जवाब- मैं महाराणा प्रताप का वंशज हूँ, राजपूत हूँ। सर कटा लूँगा लेकिन भ्रष्टाचारियो-षड्यंत्रकारियोंके सामने झुकूँगा नहीं। मेरे ख़िलाफ़ सारे केस झूठे हैं।जो करना है कर लो
— Manish Sisodia (@msisodia) August 22, 2022
இதுகுறித்து மேலும் அவர் நான் ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்தவர் என குறிப்பிட்டுள்ள மணீஷ் சிசோடியா, தனது தலையை வெட்டிகொள்வேனே தவிர சதிகாரர்கள், ஊழல்வாதிகளின் முன் தலை குனிய மாட்டேன் என ஆவேசமாக தெரிவித்துள்ளார். மேலும், என் மீதான வழக்குகள் அனைத்தும் பொய்யானவை. நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்களோ அதை செய்யுங்கள் என்றும் பாஜகவுக்கு சவால் விடுத்துள்ளார்.