சென்னையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு வார்டு வாரியாக உதவி பொறியாளர்களிடம் மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேந்திரன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதில் கடந்த வருடத்தை விட எதிர்வரும் பருவமழையில் 80 சதவீதம் வெள்ளை பாதிப்பு குறையும் என்று வார்டு பொறியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.
அதோடு வடகிழக்கு பருவமழை முன் தடுப்பு நடவடிக்கையும், மாநகராட்சி துவங்கி இருப்பதுடன் தங்களுடைய பகுதியிலிருக்கின்ற மழை நீர் வடிகால் கட்டமைப்பை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற சென்ற வருடம் நவம்பர் மாதத்தில் அதிக அளவு மழை பெய்தது. சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக, 2000-க்கும் மேற்பட்ட தெருக்களில் மழை நீர் தேக்கம் உண்டானது.
மழைநீர் தேக்கத்திற்கு அதிமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு முறையாக ஏற்படுத்தாததுதான் காரணம் என திராவிட முன்னேற்ற கழகம் குற்றம் சுமத்தியது. அதே சமயம் மழை நீர் வடிகால் தூர்வாரி பராமரிக்கவில்லை என்று திமுக அரசு மீது அதிமுக குற்றம் சாட்டியது.
ஆனால் தற்போது திமுக அரசு பொறுப்பு ஏற்றுக்கொண்டு ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில், இந்த வருடமும் வெள்ள பாதிப்பு உண்டானால் மக்களின் கோபத்திற்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்பட்டு விடும். ஆகவே சென்ற வருடம் மழைநீர் தேங்கிய பகுதிகள் மற்றும் வடிகால் இல்லாத பகுதிகளில் கட்டமைப்பு ஏற்படுத்தும் விதத்தில் 4,070.10 கோடி ரூபாய் மதிப்பில் 1,033.15 கிலோமீட்டர் நீளமுள்ள மழை நீர் வடிகால் பணி நடைபெற்று வருகிறது.
அதோடு இணைப்பு இல்லாத 144 இடங்கள் கண்டறியப்பட்டு மழை நீர் வடிகாலுக்கான இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகளை துரிதப்படுத்தும் விதத்தில் சென்னையில் தனி கவனம் செலுத்தி முதலமைச்சர் ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு, தலைமைச் செயலாளர் இறையன்பு, நகராட்சி நிர்வாக துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவராஜ் மீனா, மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ககந்திப் சிங் பேடி உள்ளிட்டோர் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், வடகிழக்கு பருவ மழைக்கான முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையும், மாநகராட்சி ஆரம்பித்துள்ளது. ஆலோசனையினடிப்படையில், சென்னை மாநகராட்சி பொது தலைமை பொறியாளர் ராஜேந்திரன் தலைமையில் வார்டு வாரியாக இருக்கின்ற இளநிலை மற்றும் உதவி பொறியாளர்களிடம் ரிப்பன் மாளிகையில் தனித்தனியே ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இதில் வெள்ள பாதிப்பு உண்டாகாமல் பொதுமக்களை தங்க வைப்பதற்கான இடங்கள் போன்ற விவரங்கள் கேட்டறியப்பட்டு அவர்களுக்கு ஆலோசனையும் வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்ததாவது, சென்ற வருடங்களில் 64 ஆவது வார்டில் 28 இடங்களில் மழை நீர் தேக்கமிருந்தது. தற்சமயம் எதிர்வரும் ஆண்டில் 7 இடங்கள் என்ற நிலையில் தான் மழை நீர் தேக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மழை நீர் தேக்கம் மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய் போன்ற விவரங்கள் சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் மிக விரைவில் பதிவிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தலைநகர் சென்னையில் வடகிழக்கு பருவமழை துவங்க ஓரிரு மாதங்களே இருக்கின்ற நிலையில், தற்போது அமைக்கப்பட்டு வருகின்ற மழைநீர் வடிகால் பணிகள் 55 சதவீதம் வரையில் முடிவடைந்து இருக்கிறது.
அக்டோபர் மாதத்திற்குள் 90 சதவீத பணிகள் முடிப்பதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. பணிகள் முழுமை பெறாவிட்டாலும் கூட அங்கே மழை நீர் தேங்காமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தியிருக்கிறது.