அரசு விழாவில் அதிமுகவின் சட்டசபை உறுப்பினர் ஒருவருக்கு மேடையில் முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் ஈச்சனாரி அருகே இன்று நடைபெறும் அரசு விழாவில் 1,7,061 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார்.
முடிக்கப்பட்ட பணிகளை பயன்பாட்டிற்கு துவங்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். முதலமைச்சர் விழா மேடையில் 16 இருக்கைகள் போடப்பட்டிருக்கின்றன. முதல்வருடன் மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சித் தலைவர், டிஆர்ஓ ,மேயர், 7 அமைச்சர்கள், அந்த தொகுதியின் சட்டசபை உறுப்பினர் உள்ளிட்டோருக்கு இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.
விழா நடைபெறும் இடம் கிணத்துக்கடவு தொகுதி என்பதால் அதிமுகவின் சட்டசபை உறுப்பினர் தாமோதரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதோடு, முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. சென்ற வருடம் நவம்பர் மாதம் 22ஆம் தேதி கோயம்புத்தூர் வ உ சி மைதானத்தில் விழா நடைபெற்ற போது தெற்கு தொகுதி சட்டசபை உறுப்பினர் என்ற முறையில் பாஜகவை சார்ந்த வானதி ஸ்ரீனிவாசனுக்கு இருக்கை ஒதுக்கியதோடு, பேசுவதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
முதலமைச்சர் முன்னிலையில் அவர் பேசி தொகுதியின் தேவையை எடுத்துரைத்தார். அதேபோல அதிமுகவின் சட்டசபை உறுப்பினர் தாமோதரன் பங்கு பெற்று தொகுதியின் தேவையை எடுத்துரைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.