‘நீங்க ஃபார்முக்கு திரும்பி வர கடவுள வேண்டிக்குறேன்’… ரசிகர்களின் நெஞ்சில் இடம்பிடித்த பாக் வீரர்
ஆசியக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது ஷாகீன் அப்ரிடி காயத்தில் விலகி இருப்பது. அணியில் தேர்வு செய்யப்படா விட்டாலும், அவர் அணியோடு தற்போது துபாயில் உள்ளார். இந்நிலையில் அவர் பயிற்சியின் போது நேற்று இந்திய வீரர்களை சந்தித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
மைதானத்தின் ஓரத்தில் அமர்ந்திருந்த அவரிடம், இந்திய லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் அணுகி, அவரது உடல்நிலை குறித்து கேட்டு பேசினார்.
சஹாலுக்குப் பின்னர் விராட் கோலி அவரை சந்தித்து பேசினார். அப்போது கோலி “இப்போது எப்படி இருக்கிறீர்கள். மருத்துவர் என்ன சொல்லி இருக்கிறார்?’ என்று கேட்க , ஷாகீன் “உலகக்கோப்பை தொடர் வரை ஓய்வில் இருக்க சொல்லியுள்ளனர்” எனப் பதிலளித்தார். பின்னர் கோலியிடம் “நீங்கள் இந்த ஆசியக் கோப்பை தொடரில் மீண்டும் பழைய பார்முக்கு வரவேண்டும் என நான் இறைவனைப் பிராத்திக்கிறேன்” எனக் கூற அவருக்கு “நன்றி கூறினார் கோலி. இதன் பின்னர் அவர் ரிஷப் பண்ட் உள்ளிட்ட வீரர்களை சந்தித்து, அனைவரிடம் சிரித்து பேசிய அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
காலேயில் நடந்த இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஏற்பட்ட காயத்தில் இருந்து அவர் குணமடைய 6 வாரங்கள் வரை ஆகும் என்று சொல்லப்படுகிறது. அவர் இல்லாதது பாகிஸ்தான் அணியின் வேகப் பந்து வீச்சு தாக்குதலில் தொய்வை ஏற்படுத்தியுள்ளது.