விஸ்வரூபம் எடுக்கும் யு பி ஐ பரிவர்த்தனை! ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இத்தனை கோடி பரிவர்த்தனையா?

0
167

நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது பட்டி தொட்டி வரையில் சென்றடைவதற்கு காரணமாக இருந்தது யுபிஐ தான். இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் ஏற்படுத்திய யூபிஐயின் வளர்ச்சி நோய் தொற்று காலகட்டத்திற்கு பிறகு அசுர வளர்ச்சியை எட்டியிருக்கிறது.

சமீபத்தில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணங்கள் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகின ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பில் யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த போவதில்லை என்று தெரிவித்தார்.

ஆகவே இது கட்டணமில்லாத சேவை என்ற காரணத்தால், கூகுள் பே, போன் பே, உள்ளிட்ட செயலைகள் மூலமாக யுபிஐயை பயன்படுத்தி பெட்டிக்கடை முதல், சூப்பர் மார்க்கெட் வரையில் பொதுமக்கள் பணம் செலுத்தி வருகிறார்கள்.

தற்பொழுது எல்லோரிடத்திலும் ஸ்மார்ட்போன் மற்றும் இன்டர்நெட் வசதி இருப்பதால் டிஜிட்டல் பரிவர்த்தனை பல மடங்கு வேகமெடுத்திருக்கிறது.

இந்த நிலையில், யூபிஐ பரிவர்த்தனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 10.73 லட்சம் கோடியை எட்டியிருப்பதாக தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது இது கடந்த மாதத்தை விடவும், சற்றே அதிகம் எனவும், சொல்லப்படுகிறது.

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் வெளியிட்ட தரவுகளின் படி ஆகஸ்ட் மாதத்தில் யூபிஐ பரிவர்த்தனைகளின் மதிப்பு ஒட்டுமொத்தமாக 6.57 பில்லியன் அதாவது 657 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த ஜூலை மாதத்தில் 628 கோடி பரிவர்த்தனைகளும், ஜூன் மாதத்தில் 10.14 லட்சம் கோடி மதிப்புள்ள 586 கோடி பரிவர்த்தனைகளும், மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்திய குடுப்பனவுக் கழகத்தின் மற்ற தரவுகளின் அடிப்படையில் உடனடி பண பரிமாற்ற முறையான ஐ எம் பி எஸ் மூலமாக கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 4.46 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 46.69 கோடி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன அதற்கு முன்னதாக ஜூலை மாதத்தில் ஒட்டுமொத்தமாக 4.45 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 46.08 கோடி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

டோல் பிளாசாக்களில் தானியங்கி கட்டண முறையான NETC FASTAC மூலமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 4,245 கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகளும், ஜூலை மாதத்தில் 4,162 கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகளும், மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனடிப்படையில், ஜூலை மாதம் 26.05 கோடியாக இருந்த பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தில் 27 கோடியாக அதிகரித்திருக்கிறது.

ஆதார் எண்ணை வைத்து வீட்டு வாசலுக்கு வந்து பணம் வழங்கும் முறை கடந்த ஜூலை மாதத்தை விடவும் ஆகஸ்ட் மாதத்தில் 10% வரையில் குறைந்திருக்கிறது. ஜூன் மாதத்தில் 11 கோடி ரூபாய் பரிவர்த்தனைகள் மூலமாக 30,199 கோடி விநியோகிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் மாதம் 27,186 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 .56 கோடி பரிவர்த்தனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ பரிவர்த்தனை 2019 ஆம் வருடம் அக்டோபர் மாதம் முதல் முறையாக 100 கோடியை எட்டியது. அதன் பிறகு 2020 அக்டோபர் மாதத்தில் இரு மடங்காக அதிகரித்து 200 கோடியை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleதமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை வென்றவர்கள் இவர்கள் தானா?..
Next articleஇனி கர்ப்பிணி பெண்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல கூடாது? அமைச்சர் வெளியிட்ட தகவல்!