மிஸ்டர் ஐபிஎல் என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வை அறிவித்திருப்பது அவருடைய ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ரசிகர்களால் சின்னதல என அன்புடன் அழைக்கப்பட்ட சுரேஷ் ரெய்னா கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2 வருடங்களுக்கு முன்னதாக மகேந்திர சிங் தோனியும், சுரேஷ் ரெய்னாவும், ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதியன்று அடுத்தடுத்து சர்வேச உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் செய்தியை வெளியிட்டனர்.
இந்த ஓய்வு அறிவிப்பு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தோனியின் ஜெர்சி எண் 7 என்னுடைய ஜெர்சி எண் 3 ஒன்றிணைந்தால் 73 இந்தியா சுதந்திரமடைந்து 73 ஆண்டுகள் நிறைவு என அனைத்தும் ஒன்று சேர்ந்த தினம் அன்று. ஆகவே இதை விட சிறந்த தருணம் அமையாது என்று ஓய்வு பெற்று விட்டோம் என விளக்கமளித்திருந்தார் சுரேஷ் ரெய்னா.
இதனையடுத்து ஐபிஎல் போட்டிகளில் மட்டும் பங்கேற்று வந்தார் சுரேஷ் ரெய்னா, கடந்த வருடம் இவர் ஐபிஎல் தொடரிலும் விளையாடவில்லை, கடந்த ஐபிஎல் தொடரில் இவரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.
இந்த நிலையில், சுரேஷ் ரெய்னா ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தற்போது அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தன்னுடைய வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, நாட்டிற்காகவும் உத்திரபிரதேசத்திற்காகவும், விளையாடியது எனக்கு மிகவும் பெருமையான ஒன்று.
எல்லா வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவிக்கிறேன். பிசிசிஐ உத்தரப்பிரதேச கிரிக்கெட் சங்கம் மற்றும் அனைத்து ரசிகர்களுக்கும் என்னுடைய நன்றி என பதிவு செய்துள்ளார்.