அண்ணா சாலையில் மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்: போலீசாருக்கும் ஊழியர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தனர், இதன் காரணமாக மின்சார வாரிய பணிகள் மற்றும் சேவைகள் பாதிக்கப்படும் சூழல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் மின் வாரிய சேவை தடைபடாமல் இருக்க போராட்டக்காரர்களின் தரப்பில் இருந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.
மின்சார வாரியம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளது, குறிப்பாக அவுட்சோர்சிங் முறையில் ஆன பணிநியமனம் கைவிடல் மற்றும் ஏற்கனவே பணியாற்றும் ஊழியர்களின் பணி உயர்வு, முத்தரப்பு உடன்பாட்டின் அடிப்படையில் மின்சார ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுதல், தனியார் பங்களிப்புடன் செய்யப்படும் மறுசீரமைப்பு பணிகளை கைவிடுதல் மற்றும் மின்வாரிய ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வட்டார, மாவட்ட மற்றும் தமிழக தலைமை அலுவலகங்களில் மின்சார வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தை இன்று காலை முதல் தொடங்கியுள்ளனர். ஏழு தொழிற்சங்க பிரதிநிதிகள் இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
போராட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து பிரதான வாயிலை மூடி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை அப்புறப்படுத்த தொடர்ந்து காவல்துறையினர் முயற்சிகளை எடுத்து வருகின்றனர், இதனால் அங்கு போலீஸ்காரருக்கும் ஊழியர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் சாலையின் இருபுறங்களிலும் அமர்ந்து கண்டன முழக்கங்களை கூறி வருகின்றனர். தற்போது போராட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய வருகின்றனர்.