முன்னாள் பிரதமர் வாஜ்பாய், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது பிறந்த டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தலைமை செயலகமான லோக் பவனில் அவரது பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.89.6 லட்சம் மதிப்பில் வாஜ்பாய்க்கு அமைக்கப்பட்டுள்ள 25 அடி உயர வெண்கலச் சிலையை ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிரபல சிற்பி ராஜ் குமார் பண்டிட் வடிவமைத்துள்ளார்.
வாஜ்பாயின் 95ஆவது பிறந்த தினத்தையொட்டி லக்னோவில் உள்ள தலைமை செயலகமான லோக் பவனில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்சியில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் அனந்தி பென் பாட்டீல், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிலை திறப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து அடல் பிகாரி மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது, “எப்போது பேச வேண்டும், எப்போது அமைதி காக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் வாஜ்பாய். அவரது பேச்சைவிட அவரது அமைதி சக்தி வாய்ந்தது. நாட்டில் மிக நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் இழுபறியில் இருந்த சில முக்கிய விஷயங்கள் அமைதியான முறையில் நிறைவேற்றுபட்டு வருகின்றன. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370ஆவது பிரிவு, ராமர் கோயில் பிரச்சினைகள் சுமூகமாக முடிக்கப்பட்டன. அதேபோல் பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது. 130 கோடி இந்தியர்களும் நம்பிக்கையுடன் இத்தகைய சவால்களுக்கான தீர்வை கண்டுள்ளனர். ஆனால் இதை புரிந்துகொள்ளாமல், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அடுத்த தலைமுறையினருக்கு சொந்தமான சொத்துக்களை அடித்து நொறுக்குகின்றனர்.
அத்துடன் போரட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுட்டு பொதுச் சொத்துகளுக்கு சேதம் விழைவிப்போர் வீட்டில் அமைதியாக அமர்ந்து யோசிக்க வேண்டும், தங்களது செயல் சரியா தவறா என்று தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்” எனவும் பிரதமர் மோடி அப்போது வலியுறுத்தினார்.