ஒரு மணி நேர மழைக்கே இந்த நிலைமை! உடனே நடவடிக்கை எடுக்க ஓ.பி.எஸ் வலியுறுத்தல் 

0
176
O Panneerselvam
O Panneerselvam

ஒரு மணி நேர மழைக்கே இந்த நிலைமை! உடனே நடவடிக்கை எடுக்க ஓ.பி.எஸ் வலியுறுத்தல்

வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில் நேற்று பெய்த ஒரு மணி நேர மழைக்கே சென்னையில் பல பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதை சுட்டிக்காட்டி வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று ஒ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ” பருவமழைக் காலங்களில் ஆங்காங்கே சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்குவதை உடனுக்குடன் வெளியேற்றுவது, தெருக்களில் தேங்கும் தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்துவது, வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்வது, பருவமழை துவங்குவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது ஆகியவை ஒரு மாநில அரசின் முக்கியமான கடமைகளாகும்.

இதற்கேற்ப, வட கிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் 26-09-2022 அன்று முதலமைச்சர் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் , கடந்த ஆண்டு பெருமழை காரணமாக சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாகவும், இந்த ஆண்டு அதுபோன்ற நிலைமை ஏற்படக்கூடாது என்றும், வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நிறைவேற்றப்படுவதாகவும், முக்கியக் கால்வாய்களில் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாகவும் தெரிவித்து, இந்த ஆண்டு மழை நீர் தேங்காது என்று ஓரளவு எதிர்பார்ப்பதாகவும் கூறி இருந்தார். முதலமைச்சர் ‘ஓரளவு’ என்று சொல்வது இந்த ஆண்டும் மழை நீர் தேங்குமோ என்ற சந்தேகம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், நேற்று முன் தினம் பெய்த ஒரு மணி நேர மழையில் சென்னை மாநகரமே வெள்ளத்தில் மூழ்கியது. இந்த மழைக்கும், வழக்கம் போல் பாதிக்கப்படும் பகுதிகளான கோடம்பாக்கம், வேளச்சேரி, தரமணி, கிண்டி, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், காரப்பாக்கம், செம்மஞ்சேரி, திருவல்லிக்கேணி, திருவொற்றியூர், ராயபுரம், பிராட்வே, கொடுங்கையூர், தியாகராய நகர், வண்ணாரப்பேட்டை என பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஒரு மணி நேர மழைக்கே இந்த நிலைமை என்றால், வடகிழக்கு பருவமழைக் காலத்தின்போது தொடர்ந்து மழைப் பொழிவு ஏற்பட்டால் நிலைமை என்னவாகுமோ என்ற அச்சத்தில் மக்கள் உறைந்து போயுள்ளனர்.

இரு தினங்களுக்கு முன்பு பெய்த மழையை அடுத்து, வெள்ளத் தடுப்புப் பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்து, அக்டோபர் மாதத்திற்குள் வெள்ளத் தடுப்புப் பணிகளை முடிக்க உத்தரவிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. இருப்பினும், இந்த வெள்ளத் தடுப்புப் பணிகள் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் முடியுமா என்பது கேள்விக்குறிதான். ஏனென்றால், நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் அந்த அளவுக்கு இருக்கிறது.

எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி, வெள்ளத் தடுப்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும், பருவமழையின் போது, ஆங்காங்கே தோண்டப்பட்டு இருக்கும் பள்ளங்களை சுற்றி வைக்கப்பட்டு இருக்கும் தடுப்புகளை கண்காணிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று அவர் அதில் வலியுறுத்தியுள்ளார்.

Previous articleஆட்டோ கவிழ்ந்து விபத்து ஓட்டுனர் பலி! பரபரப்பு சம்பவம்!
Next articleமனைவியை கட்டாயப்படுத்தி ஆசைக்கு இணங்க வைக்க கூடாது!! கணவன்மார்களுக்கு உச்ச நீதிமன்றம் வைத்த செக்!!