நாமக்கல் மாவட்டத்தில் நடந்த மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அந்த கட்சியின் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான தங்கமணி தலைமை தாங்கினார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்ளலாம்? அதிமுக எதிர்வரும் நாட்களில் செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன? என்பது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
அதன் பிறகு உரையாற்றிய தங்கமணி கடந்த சட்டசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி பன்னீர்செல்வம் வேண்டா வெறுப்பாக மட்டுமே ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.
ஒற்றை தலைமை விவகாரத்தில் பன்னீர் செல்வத்துடன் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தியதாகவும், மரியாதை குறைவு ஏற்பட்டு விடக்கூடாது என்று இணை பொதுச் செயலாளர் பதவி வழங்க முன் வந்ததாகவும் தெரிவித்தார்.
பன்னீர் செல்வத்துடன் தனியாக பேச முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர் அவருடைய ஆதாரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன் உள்ளிட்டோர் எப்போதும் உடன் இருப்பார்கள் என்றும் குறிப்பிட்டார். அவர்கள் எல்லோரும் அதிமுக ஒன்று சேரக்கூடாது என்பதில் முக்கிய பங்கு வகித்ததாகவும் தங்கமணி குற்றம் சுமத்தியுள்ளார்.
இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையின் போது முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வைத்திலிங்கம் அடிக்க முயற்சி செய்ததாகவும் தங்கமணி கூறினார்.
பிளவுபட வேண்டும் என்பதுதான் பன்னீர்செல்வத்தின் எண்ணம் எனவும், அதனை அவர் நிறைவேற்றி விட்டதாகவும் தங்கமணி கூறினார். உச்சநீதிமன்றத்தில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தக்கூடாது என்று தடை ஆணையை வாங்கியதாக தெரிவித்து தவறான செய்தியை பன்னீர்செல்வம் பரப்புவதாகவும் தங்கமணி விமர்சனம் செய்தார்.
திமுக தலைமையிலான ஆட்சியை மக்கள் விரும்பவில்லை எனவும் தங்கமணி தெரிவித்தார். அதோடு மக்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களிக்க பொதுமக்கள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.