வேலுமணி கோட்டையை செந்தில் பாலாஜி தகர்ப்பாரா? அதிமுகவை வீழ்த்த புதிய வியூகம்!
குறிப்பாக தனது சொந்த மாவட்டமான கரூரில் திமுகவை வளர்க்க வேண்டும் என்ற செந்தில் பாலாஜியின் திட்டம் படிப்படியாக நிறைவேறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காலங்காலமாக இருந்து வரும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் திமுக ஆட்சியில் அமைச்சராக வந்ததில்லை என்ற குறையை செந்தில் பாலாஜி தற்போது தீர்த்து வைத்துள்ளார். இது கரூர் மாவட்ட உடன்பிறப்புகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்திய உள்ளது.
அதைப்போலவே தான் வகித்து வரும் மாவட்ட செயலாளர் பதவியிலும் உடன்பிறப்புகள் கொண்டாடும் வகையில் சிறப்பாக அவர் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் வைத்த நம்பிக்கை தற்போது வரை வீண்போகவில்லை. அதற்கு உதாரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தல், அரவக்குறிச்சி இடைத்தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல், 2022 ஆம் ஆண்டில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் திமுக பெற்ற வெற்றிகளைக் கூறலாம்.
இதற்கு முன்னதாக அதிமுக ஆட்சியில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் மட்டும் திமுகவினர் மத்தியில ஒரு குறையாக இருந்து வருகிறது. அப்போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது நடந்த தேர்தல் என்பதால் கரூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் அதிமுகவே வென்றது. இந்த விஷயம் தற்போது ஆளும் கட்சியாக உள்ள திமுக ஆட்சியில் உறுத்தலாக இருந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வகுத்துக் கொடுத்த வியூகம் படு வேகமாக ஒர்க் அவுட் ஆகி வருவதாக சொல்லப்படுகிறது.
இவற்றையும் திமுக வசப்படுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அப்படி வந்துவிட்டால் ஊரகப் பகுதிகள், நகர்ப்புறப் பகுதிகள் என அனைத்திலும் கரூர் முழுவதும் திமுகவின் கொடியே பறக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது அவ்வளவு எளிதான காரியமல்ல என்றும் அரசியல் களத்தில் பேசிக் கொள்கின்றனர்.
அந்த வகையில் இந்த டாஸ்க்கில் செந்தில் பாலாஜிக்கு சரியான சவால் காத்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதையடுத்து பொறுப்பு அமைச்சராக பதவி வகிக்கும் கோவை மாவட்டத்தில் அடுத்தகட்ட அசைன்மெண்ட் தொடங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம் வேலுமணி கோட்டையை செந்தில் பாலாஜி தகர்ப்பாரா? கரூர் மற்றும் கோவையில் 2024 மக்களவை தேர்தல் களம் எப்படி இருக்கப் போகிறது? என உடன்பிறப்புகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.