ஆர் எஸ் எஸ் பேரணி நடத்த தடை? முதல்வருக்கு பறந்த அவசரக் கடிதம்!
அக்டோபர் இரண்டாம் தேதி ஆர் எஸ் எஸ் பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதனிடையே வரும் ஆறாம் தேதி பேரணி நடத்த அனுமதி அளித்தனர். அந்த வகையில் 50 இடங்களுக்கு அனுமதி கேட்ட நிலையில் தற்போது மூன்று இடங்களுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளனர். அத்தோடு ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்கு பல கட்சிகள் சார்பில் எதிர்ப்புகள் வந்த வண்ணமாகவே தான் உள்ளது. அந்த வகையில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் முதல்வருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
அதில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதிக்கும் படி வலியுறுத்தியுள்ளார். ஆர் எஸ் எஸ் பேரணி நடைபெற்றால் மதரீதியாக பல சவால்களை சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளார். அந்த வகையில் இவர் கடிதத்தில் கூறியதாவது,மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்களுக்கு வணக்கம்.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார் அமைப்புகள் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும், மதமோதல், கலவரத்தை தூண்டும் வகையிலும் வெறுப்பு அரசியலை முன்னெடுத்து வருகின்றன.
கடந்த அக்டோபர் 2ந் தேதி காந்தி ஜெயந்தியன்று ஆர்.எஸ்.எஸ். தமிழகத்தில் 60 இடங்களில் பேரணி நடத்தப்போவதாக அறிவித்தது. இப்பேரணிகள் நடைபெற்றால் இந்த அமைப்புகள் மதமோதலை உருவாக்கும் வகையில் கலவரத்தை தூண்டக்கூடும் எனவும், தமிழகத்தின் அமைதியையும், சட்டம் – ஒழுங்கையும், மக்கள் ஒற்றுமையையும் சீர்குலைக்கக் கூடும் என்பதையும் சுட்டிக்காட்டி இப்பேரணிக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகளும், பொதுமக்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இக்கோரிக்கைகளை பரிசீலித்த தமிழக காவல்துறை அக்டோபர் 2ந் தேதி அன்று நடைபெறவிருந்த பேரணிக்கு அனுமதி மறுத்தது. இந்நிலையில் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் நவம்பர் 6ந் தேதி பேரணிக்கு இந்த அமைப்பு அனுமதி பெற்றது. சமீபத்தில், தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பொறுப்பான தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு பின்னர் வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு தமிழக அரசு மாற்றிய பின்னரும், தமிழகத்தில் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளும் தொடர்ந்து வெறுப்பு அரசியலை விதைத்து வருகின்றன. மதவெறியைத் தூண்டி கலவரத்தை ஏற்படுத்தவும், மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்கவும் திட்டமிட்டு சதி நடவடிக்கைகளில் ஈடுபட முனைந்துள்ளனர்.
பாஜகவும் கோவை சம்பவத்தை தனது அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இந்த பதற்ற சூழ்நிலைக்கு மேலும் வலுசேர்ப்பதாக ஆர்.எஸ்.எஸ். பேரணிகள் அமைந்துவிடும் என்பதில் ஐயமில்லை. எனவே, மதவெறியைக் கிளப்பி தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கோடு ஆர்.எஸ்.எஸ், சார்பாக நவம்பர் 6 அன்று நடைபெறும் பேரணிகளுக்கு முற்றிலுமாக தடை விதிக்க தமிழக அரசு சட்டப்பூர்வமான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்வதாக கே.பாலகிருஷ்ணன் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஆர் எஸ் எஸ் பேரணி நடத்துவதற்கு தடை விதிக்க கோரி இவர் வலியுறுத்து கேட்டுள்ள கடிதம் தமிழக முதலவர் முன்னிலையில் பரீசீலனை செய்யப்படுமா என்று, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.