சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் குறைப்பு
சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களில் தற்போதுள்ள நடைமேடை கட்டணம் ரூ.20-லிருந்து ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, ரயில் நிலையங்களில் ஏற்படும் தேவையில்லாத கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களில் வழக்கமாக வசூலிக்கப்பட்ட்ட நடைமேடை கட்டணம் ரூ.10-லிருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டிருந்தது. இந்த நடைமுறை கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பண்டிகை காலம் முடிந்து விட்டதால் சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணமானது உயர்த்தப்பட்ட ரூ.20-லிருந்து மீண்டும் பழைய கட்டணமான ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கபட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ.20-லிருந்து ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமேடை கட்டணம் குறைப்பு நடவடிக்கையானது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.இவ்வாறே, தெற்கு ரயில்வேயில் இருக்கும் திருச்சிராப்பள்ளி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட ரயில்வே கோட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களிலும் நடைமேடை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.