தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதன் அடிப்படையில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ,தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ஆகவே தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கி முதன்மை மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்திருக்கிறார். அதோடு விடுமுறை தினமான இன்று தேனி மாவட்டத்தில் இருக்கின்ற பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தில் வேல் முருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் விடுமுறை தினமாகும். வடகிழக்கு பருவமழையால் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், சிபிஎஸ்சி பள்ளிகள், ஐசிஎஸ்இ பள்ளிகள் உள்ளிட்டவற்றில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.