மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1000 ரூபாய் இழப்பீடு! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு
தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் வெள்ளகாடான சீர்காழி தாலுக்காவிற்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்துள்ளார். மேலும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1000 ரூபாய் இழப்பீடு வழங்கவும் அறிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது. இந்நிலையில் வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது.
குறிப்பாக டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை , நாகப்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதில், சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இதுவரை வரலாறு காணத அளவிற்கு 6 மணி நேரத்தில் 44 செ.மீ. மழை பெய்ததால் வெள்ளகாடானது.
கனமழையால் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரம் நீர் சூழ்ந்து ஒரு தீவு போல காட்சி அளித்தது. இதனால், அங்குள்ள மக்கள் அடிப்படை வசதிகளுக்கு கூட அவதிப்பட்டனர். பல இடங்களில் மின்சாரம் தூண்டிக்கப்பட்டதோடு போக்குவரத்து முழுவதும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டதோடு மக்களுக்கு தேவையான பாய், உணவு பொருட்கள், உள்ளிட்டவற்றை வழங்கினார்.
மேலும், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார். சில இடங்களில் தரைப்பாலங்கள் உடைந்துள்ளதால் மழைநீர் முழுவதும் வடிந்தால் தான் அதனை சரிசெய்ய முடியும் என பொதுப்பணி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.