அன்புமணி ராமதாஸ்: அதிமுக இரு திசைகளாக உள்ளது..அதனுடன் கூட்டணி இல்லை! சலித்து போன மக்களுக்கு பாமகவின் புதிய ஆட்சி!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாமக நிர்வாகிகளுடன் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பிறகு அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, தற்பொழுது வரை சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் சரிவர முடிவு பெறாமலே உள்ளது. பருவமழை காரணமாக ஆங்காங்கே நீர் தேக்கங்கள் ஏற்படுகிறது.
மேலும் சென்னையை சுற்றியுள்ள சில பகுதிகளில் தமிழக அரசு ஒரு டிஎம்சி கொள்ளளவு கொண்ட 10 ஏரிகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தற்பொழுது தமிழக அரசு மேற்கொண்டு வரும் பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் போதுமானது அல்ல. அதேபோல தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை மசோதா தாக்கல் செய்தும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது மிகப்பெரிய குற்றமாகும்.
விரைந்து ஆளுநர் ஒப்புதல் அளித்து எதிர்வரும் இழப்புகளை தவிர்க்க வேண்டும். மக்கள் 55 ஆண்டுகாலம் அதிமுக, திமுக என்று இரு கட்சிகளின் ஆட்சியை பார்த்து போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டதாக தெரிவித்தார். அந்த வகையில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாமக கட்டாயம் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று கூறினார். அதை மையப்படுத்தி தான் தற்பொழுது அரசியல் பயணத்தை 2.0 ஆக மேற்கொண்டு வருவதாக கூறினார்.
இந்த சூழ்நிலையில் அதிமுக இரு பக்கங்களாக பிரிந்து உள்ளது.இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் நாங்கள் இதை செய்வோம் அதை செய்வோம் என்று கூறிய வாக்குறுதிகளை எல்லாம் தற்பொழுது வரை நிறைவேற்றாமலே உள்ளது. அதேபோல தமிழகத்தில் ஆளுநர் ஒரு பக்கம் முதல்வர் ஒரு பக்கம் என்ற நடவடிக்கை இருந்து வருகிறது. முதல்வர் ஆளுநரை சந்தித்து இருவருக்கும் இடையே உள்ள பிரச்சனையை சுமுகமான முறையில் தீர்த்து நல்லாட்சி அமைய வழி வகுக்க வேண்டும்.
அதேபோல இரண்டாவது விமான நிலையம் ஆனது சென்னையில் கொண்டு வருவது பாமகவின் பல நாள் கோரிக்கை. ஆனால் மக்களின் விளைநிலங்களை பறித்து விமான நிலையம் அமைப்பது மிகப்பெரிய தவறு. இதனை பாமக ஒருபொழுதும் ஒப்புக் கொள்ளாது. இவ்வாறு விளைநிலங்களை கைப்பற்றி விமானம் நிலையம் அமைப்பதற்கு பதிலாக திருப்போரில் சில அரசு காலியிடங்கள் உள்ளது.
அவற்றில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்தார். அதிமுக திமுக ஆட்சியைப் பார்த்து மக்கள் சலித்து விட்டதாக கூறிய பாமக தலைவர் 2026ஆம் ஆண்டு நடைபெறப்போகும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணியின்றி தனித்துப் போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளது.