கொடுஞ்சிறையிலிருந்து விடுதலை ஆனவர்களை மீண்டும் கொலைகளத்திற்கே அனுப்புவதா? முதல்வருக்கு திடீர் கடிதம் எழுதிய சீமான்!

0
183

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையானவர்களை சிறப்பு முகாமில் இருந்து விடுவித்து அவர்கள் செல்ல விரும்பும் நாடுகளுக்கு அனுப்ப வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு அவர் கடிதம் எழுதி இருக்கிறார்.

அந்த கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிக் கொண்டு 31 வருட காலத்திற்கு பின்னர் சட்டப் போராட்டத்திற்கு பிறகு விடுதலை பெற்றுள்ள தம்பி ராபர்ட் , அண்ணன் ஜெயக்குமார், தம்பி சாந்தன், தம்பி முருகன் உள்ளிட்டோர் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள செய்தியையும், அவர்களுடைய விடுதலையின் மகத்துவத்தையும் தாங்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள்.

இளம் பருவத்தில் சிறையில் அடைக்கப்பட்டு வெளியுலக தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்டு தங்களுடைய குடும்பத்தினரையும், உறவுகளையும் பிரிந்து சிறை கொட்டடியிலேயே வாழ்வின் பெரும்பகுதியை கழித்த அவர்களுக்கு, மீதம் இருக்கும் காலமாவது முழுமையாக விடுதலையின் மகத்துவத்தை தர வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும்.

6 பேரும் விடுதலை பெற்று விட்டார்கள். என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை உள்வாங்கி முடிப்பதற்குள்ளாக, அவர்களில் நால்வர் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட செய்தி மேலும் அதிர்ச்சியை வழங்கியது. அந்த முகாமில் உள்ள ஈழ சொந்தங்களே தங்களை விடுவிக்க கோரி தொடர்ச்சியாக போராடி வருகின்ற நிலையில், இவர்கள் அனைவரையும் அங்கே அடைத்து வைத்திருப்பது சிறிதும் ஏற்புடையதல்ல என்று கூறியிருக்கிறார் சீமான்.

மேலும் வெளியுலகத்திற்கு சட்டத்தின் பார்வையில் அவர்கள் நால்வரும் விடுதலை பெற்று விட்டதாக சொன்னாலும், சிறப்பு முகாம் என்பது அவர்களுக்கு மற்றொரு சிறையாகவே இருக்கும். ஒரு சிறையில் இருந்து மற்றொரு சிறைக்கு மாற்றுவது எப்படி உண்மையான விடுதலையாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ள சீமான், புழல் சிறையில் கூட நடை பயிற்சி செல்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

ஆனால் அதற்குக் கூட வாய்ப்பில்லாத சிறப்பு முகாம்கள் என்பது தனிமை சறையை விட கொடுமையானதாக இருக்கும். அதற்கு மாற்றாக அவர்கள் நால்வரையும் இலங்கைக்கு அனுப்பும் முடிவும் மிகவும் தவறானது. கொலை களத்திற்கு அனுப்புவதற்கு சமமான ஆபத்தும் கூட .ஆகவே நால்வரும் ஈழத் தமிழர்கள் என்பதாலேயே அவர்களை சிறப்பு முகாமில் அடைப்பதும் இலங்கைக்கு நாடு கடத்த முயற்சி செய்வதும் சரியான நடவடிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளார் சீமான்.

அதோடு தங்களை சிறப்பு முகாம்களில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்து தம்பி ராபர்ட் பயாஸ் மற்றும் அண்ணன் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பட்டினி போராட்டத்தை முன்னெடுத்து அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலைக்கு ஆளாகி உள்ளார்கள் என்பது மிகுந்த கவலை அளிக்கிறது.

அவர்களுடைய உடல் நலத்திற்கு எந்த விதமான தீங்கும் நேராமல் பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் பொறுப்பும் கடமையும் ஆகும் அதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசு வழங்கிய நீண்ட சிறை விடுப்பில் அக்கா நளினி, அண்ணன் ஜெயக்குமார், தம்பி ராபர்ட் பயாஸ் உள்ளிட்டோர் வெளிவந்த தினங்களில், சட்டம் ஒழுங்கை மிகவும் மதித்து, மிகவும் அமைதியான, கண்ணியமான வாழ்வினை மேற்கொண்டனர் என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆகவே மாண்புமிகு தமிழக முதலமைச்சர் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள நான்கு பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் தங்களுடைய உறவுகளிடம் செல்ல விரும்புகின்ற பட்சத்தில் அவர்கள் விரும்பும் நாடுகளுக்கு அனுப்பி வைக்க சரியான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பணிவுடன் கேட்டுக் கொள்வதாக சீமான் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleகாயம் காரணமாக ஆட்டத்திலிருந்து விலகிய நியூசிலாந்து அணியின் கேப்டன்! தொடரை கைப்பற்றுமா இந்திய அணி?
Next articleஓபிஎஸ் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்! எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here