ரயில்வே ஊழியரின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைத்த வங்கிக்கு இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம்

0
223
Bank fined Rs 2 lakh 10 thousand for withholding pension of railway employee
Bank fined Rs 2 lakh 10 thousand for withholding pension of railway employee

ரயில்வே ஊழியரின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைத்த வங்கிக்கு இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம்

திருவாரூர்,

ரயில்வே ஊழியரின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைத்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பு.

திருவாரூர் நகரத்திற்குட்பட்ட விஜயபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் தென்னக ரயில்வேயில் பணிபுரிந்து கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெறுகிறார். மேலும் திருவாரூர் பனகல் சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் நீண்ட நாட்களாக கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளராகவும் இருந்து வருகிறார். மேலும் அந்த வங்கி கணக்கு மூலம் மாதம் தோறும் 18, 226 ரூபாயை ஓய்வூதியமாக பெற்று வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 27.05.2020 இல் இவரது வங்கி கணக்கில் ஓய்வூதியம் வரவு வைக்கப்பட்டுள்ளது.இதனை எடுப்பதற்காக அடுத்த நாள் அவர் வங்கிக்கு சென்றபோது இவர் தன்னுடன் பணிபுரிந்த நண்பர் ஒருவரின் கடனுக்காக போட்ட ஜாமீன் கையெழுத்து காரணமாக இவரது ஓய்வூதியத்தை எடுக்க முடியாமல் நிறுத்தி வைத்துள்ளதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மாதம் கொரானா ஊரடங்கு என்பதால் அவரது மார்ச் மாதத்திற்கான ஓய்வூதியம் தாமதமாக தான் வந்துள்ளது.இந்த நிலையில் அதை வைத்து வாழ்க்கை நடத்தி வரும் அவர் அந்த ஓய்வுதியம் கிடைக்காமல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்.

அதனைத்தொடர்ந்து திருவாரூர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளை இதுபோன்று பலமுறை இவரது வங்கி கணக்கில் பணம் எடுக்க முடியாமல் நிறுத்தி வைத்துள்ளது. பிறகு இதுகுறித்து  சுப்பிரமணியன் அவரது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியதும் குறிப்பிட்ட அளவு பணத்தை விடுவித்தும் உள்ளது. அதே போல மீதமுள்ள பெருமளவு பணத்தை நிறுத்தி வைப்பது என தொடர்ந்து செய்து வந்துள்ளது.

இதனையடுத்து சுப்பிரமணியன் இதுகுறித்து திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீராணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி,உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி லட்சுமணன் அடங்கிய அமர்வு புகார்தாரர் மேற்கோள் காட்டிய இரண்டு தீர்ப்புகள் மற்றும் சட்ட பிரிவுகள் அனைத்தும் புகார்தாரின் கூற்றிற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது.இந்த மேற்கோள்களின் மூலம் எக்காரணத்தைக் கொண்டும் ஓய்வூதியம் மற்றும் கிராஜுவேட்டியை நிறுத்தி வைக்க கூடாது என்பது தெளிவாகிறது.

மேலும் புகார்தாரருக்கு மாதந்தோறும் ஓய்வூதியத் தொகை அவரது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்பதை நன்கு அறிந்தும் பணத்தை வங்கி நிறுத்தி வைத்துள்ளதை சேவை குறைபாடு என்று இந்த ஆணையம் கருதுகிறது.அவரது பணத்தை நிறுத்தி வைத்து வங்கியில் இருந்து அத்தியாவசிய தேவைக்கு பணத்தை எடுக்க விடாமல் வங்கி தடுத்துள்ளது. இதனால் புகார்தாரர் மிகுந்த மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு ஆளாகி இருப்பார் என இந்த ஆணையம் கருதுகிறது.

எனவே புகார்தாரருக்கு வங்கி சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறை செய்ததற்கு இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாயையும், மேலும் புகார்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு இழப்பீடாக ஒரு லட்ச ரூபாயும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு செலவு தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அதிரடி தீர்ப்பளித்து உத்தரவிட்டது.

மேலும் இந்த உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து ஆறு வார காலத்திற்குள் புகார்தாரருக்கு இந்த தொகையினை வங்கி கிளை வழங்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் வழக்கு செலவு தொகை நீங்கலாக மீதமுள்ள தொகைக்கு 9 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous articleமாநில அரசை குறை சொல்லி குடைச்சல் கொடுக்க தான் பாஜக உள்ளது! மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் குழு உறுப்பினர் காட்டம்!
Next articleபோக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதியம்! முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்!