காசி தமிழ் சங்கத்திற்கு செல்லும் இரயிலை மாணவர் அமைப்பு மறிக்க முயல்வதாக வெளிவந்த தகவல்! போலீசாரின் அடுத்தக்கட்ட அதிரடி நவடிக்கை!
காசி தமிழ் சங்கத்திற்கு செல்லும் வாரணாசி ரயிலை மயிலாடுதுறையில் இந்திய மாணவர் சங்கம் அமைப்பினர் மறிக்க முயல்வதாக பரவிய செய்தியை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ரயில்வே நிலையத்தில் குவிக்கப்பட்டதால் பரபரப்பு:
காசியில் நடைபெற்று வரும் தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக ராமேஸ்வரத்தில் இருந்து பனாரஸ் செல்லும் ரயில் மயிலாடுதுறை வழியே வியாழக்கிழமைகள் தோறும் இயக்கப்பட்டு வருகிறது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஆர்எஸ்எஸ் சிந்தனையுடன் நடைபெறுவதாக கூறி அதனை மறியல் செய்து எதிர்ப்பு தெரிவிக்க போவதாகவும் இந்திய மாணவர் சங்கம் அமைப்பினர் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக காவல்துறைக்கு தகவல் வந்தது.
இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ், ஆயுதப்படை டிஎஸ்பி ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் நான்கு காவல்துறை ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் ஆயுதப்படை காவலர்கள் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் காலை 5 மணிக்கு குவிக்கப்பட்டனர். ரயில்வே நிலைய நுழைவாயில் பகுதியில் பார்சல் ஆபீஸ் பகுதி மறையூர் ரயில்வே கேட் பகுதி, மாப்படுகை ரயில்வே கேட் பகுதி மற்றும் இருப்பு பாதையிலும் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர் மேலும் ரயில்வே காவல்துறையினர் மற்றும் இருப்பு பாதை காவல்துறையினர் ஆகியோர் ரயில் நிலைய வளாகத்திற்குள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் ரயில் பெட்டிகளிலும் ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் பாதுகாப்பு அளித்தனர். மாப்படுகை ரயில்வே கேட் பகுதியில் இரண்டு புறங்களிலும் காவல்துறையினர் நிற்கவைக்கப்பட்டு வேறு யாரும் உள்ளே நுழையாதபடி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரயில் புறப்பட்டுச் சென்ற பின்னரும் காவல்துறையினர் காலை 9 மணி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.