கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு மீண்டும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
கால்பந்து ஜாம்பவான் என அழைக்கப்படும் பிரேசில் நாட்டைச் சேர்ந்த பீலே உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடப்பாண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் தற்போது லீக் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில், கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் என அழைக்கப்படும் பீலே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி கால்பந்து ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
17 வயதில் உலகக்கோப்பை வென்ற அவர், உலகக்கோப்பை வரலாற்றில் அதிக வெற்றிகளை குவித்த வீரர் என்ற பெருமையை பீலே பெற்றுள்ளார். 82 வயதாகும் பீலேவுக்கு குடல் பகுதியில் புற்றுநோய் கட்டி இருப்பது கடந்த ஆண்டு தெரிய வந்தது.
இதையடுத்து, பீலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டது. தொடர்ந்து இதய செயலழிப்பு மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வந்தார்.
இதுகுறித்து அவரது மகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பாவின் உடல்நிலை நன்றாக உள்ளதாகவும், விரைவில் அவருடனான புகைப்படத்தை வெளியிடுவேன் என்றும் கூறியுள்ளார். ஆனால், மருத்துவமனை தரப்பில் எந்தவித அறிக்கை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.