தமிழகம் மற்றும் கேரளாவை கலக்கி வந்த மோசடி மன்னன் கொலை குற்றத்தில் கைது
தென்காசி மாவட்டம், தமிழக-கேரள எல்லை பகுதியான ஆரியங்காவு பகுதியில் உள்ள இடைப்பாளையம் நதி கரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தென்மலை போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது, சடலமாக மீட்கப்பட்ட நபர் தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள காலங்கரை பகுதியை சேர்த்த அன்பழகன் என்பது தெரியவந்தது. மேலும், அன்பழகன் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு ஆற்றில் தூக்கி வீசப்பட்டதும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, அன்பழகனை கொலை செய்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணையை தீவிரபடுத்திய போது, முதற்கட்டமாக இந்த வழக்கில் தொடர்புடைய அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த அடைக்கலம் என்ற விக்னேஷ் என்ற நபரை கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், மதுரையை சேர்ந்த குமார் என்ற நபரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக மூளையாக செயல்பட்ட அன்பழகன் மனைவியின் கள்ளக்காதலான பைசல் என்பவனை போலீசார் பல நாட்களாக தேடி வந்தனர்.
போலீசார் பிடியில் சிக்காமல் தொடர்ந்து தப்பித்துக் கொண்டிருந்த பைசல் கோழிக்கோடு அருகே உள்ள தாமரைச்சேரி என்ற நீதிமன்றத்திற்கு வேறொரு மோசடி வழக்கிற்காக ஆஜராக வந்திருப்பது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து, அங்கு விரைந்து சென்ற தென்மலை போலீசார் பைசலை கைது செய்து, தென்மலை அழைத்து வந்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அன்பழகனை பைசல் எப்படி கொலை செய்தார்? எதற்காக கொலை செய்தார்? இந்த வழக்கில் அன்பழகனின் மனைவிக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தற்போது பைசலிடம் விசாரணை நடத்தி வரும் சூழலில், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற இரண்டு பேரையும் போலீசார் தற்போது தேடி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், தற்போது கைது செய்யப்பட்ட பைசல் மீது கேரளா மற்றும் தமிழகத்தில் பல்வேறு மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளதும், பைசல் வழக்கறிஞர், போலீஸ் என பல்வேறு முகங்களில் பலரை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளதும், அவர் மீது 50க்கும் மேற்பட்ட வழக்குகள் இரு மாநிலங்களிலும் உள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
தமிழகம் மற்றும் கேரளாவில் பலரை ஏமாற்றி தொடர் மோசடி குற்றங்களில் ஈடுபட்டு வந்த மோசடி மன்னன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.