ஓசூர் அருகே ஏரியில் முகாமிட்ட 50 காட்டு யானைகள் : வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை!
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய நூற்றுக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தமிழக வனப்பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, ஜவளகிரி, ஓசூர், ஊடேதுர்க்கம், தேன்கனிக்கோட்டை ஆகிய வனப்பகுதிகளில் முகாமிட்டு சுற்றி திரிகிறது.
இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 50 காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அங்கிருந்து ஊடே துர்க்கம் வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்தது. இன்று காலை ஊடே துர்க்கம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 50 காட்டு யானைகளும் அருகில் உள்ள நாகமங்கலம் ஏரியில் உலா வந்தது. இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்தனர்.
இதுகுறித்து அறிந்த ராயக்கோட்டை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பட்டாசுகள் வெடித்து காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.