சமந்தா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘யசோதா’ படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தென்னிந்திய நடிகைகளுள் மிகவும் பிரபலமான நடிகை சமந்தாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘யசோதா’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வித்தியாசமான கதைக்களத்துடன், பல்வேறு திருப்பங்களுடன் வெளிவந்த இந்த படம் ரசிகர்களின் கைதட்டலை பெற்றது, குறிப்பாக பெண்களுக்கு இந்த படம் பிடிக்கும் விதமாக அமைந்திருந்தது. வீட்டின் வறுமை சூழ்நிலையாளும், பணத்தேவை காரணமாகவும் வாடகைத்தாயாக இருக்க ஒப்புக்கொள்ளும் இளம்பெண்களை வைத்து ஒரு கும்பல் சதித்திட்டம் தீட்டுகிறது, அந்த சதியை எப்படி சமந்தா கண்டறிகிறார், எதிரிகளை எப்படி முறியடிக்கிறார் என்பதை விறுவிறுப்போடும், சுவாரஸ்யமாகவும் இந்த படம் காண்பித்திருக்கிறது.
படத்தின் முதல் பாதியில் குறும்புக்கார மற்றும் அப்பாவி பெண்ணாக தோன்றும் சமந்தா படத்தின் இரண்டாம் பாதியில் ஆக்ஷன் குயினாக பட்டையை கிளப்பியிருக்கிறார். ‘யசோதா’ படத்தை திரையில் கண்டு ரசித்த ரசிகர்கள் பலரும் எப்போது இந்த படத்தை ஓடிடியில் கண்டு ரசிக்கப்போகிறோம் என காத்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ஓ டிடி வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சமந்தாவின் ‘யசோதா’ படம் டிசம்பர்-9ம் தேதியன்று அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் கடந்த நவம்பர் 11ம் தேதி வெளியான ‘யசோதா’ படத்தில் சமந்தாவுடன் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னிமுகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத், திவ்யா ஸ்ரீபதா, மாதுரிமா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.