8 காவலர்கள் மீது பாயும் கொலை வழக்கு.. ஒருபோதும் பாமக சும்மா விடாது – அன்புமணி ராமதாஸ் காட்டம்!

0
245
Increasing online gambling suicides.. Is all this justified?
Increasing online gambling suicides.. Is all this justified?

8 காவலர்கள் மீது பாயும் கொலை வழக்கு.. ஒருபோதும் பாமக சும்மா விடாது – அன்புமணி ராமதாஸ் காட்டம்!

அரியலூர் மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு காவல்துறையினர் புகார் அளித்தவரை அழைத்து விசாரிக்காமல் அவரது குடும்பத்தில் உள்ளவர்களை விசாரணை என்ற பெயரில் தாக்கி அதில் விவசாயி ஒருவர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரியலூர் என்ற மாவட்டத்தில் காசங்கோட்டை என்ற பகுதியில் செம்புலிங்கம் மற்றும் அவரது மனைவி வசித்து வரும் நிலையில் இவர்களது மகன் மணிகண்டன் திண்டுக்கல்லில் பொறியியல் படித்து வருகிறார். செம்புலிங்கம் பாமக கட்சியின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது மகளின் கணவர் மீது இப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

அந்த இளைஞர் அளித்த புகார் தொடர்பாக விசாரணைக்கு சென்ற எட்டு பேர் கொண்ட போலீசார் வீட்டில் இருந்த செம்புலிங்கத்தை சரமாரியாக அவரது மருமகன் எங்கே என்று கேட்டு தாக்கியுள்ளனர். அவர் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த செம்புலிங்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டது.

இறுதியில் இவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் போலிசாரின் இந்த மனிதாபிமானமற்ற செயலை கண்டித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது வருகின்றனர். அந்த வகையில் இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியுள்ளதாவது,அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டையில் காவல்துறையினர் வீடு புகுந்து நடத்திய தாக்குதலில் அப்பாவி விவசாயி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். அவரது மனைவியும், மகனும் காயமடைந்துள்ளனர். உழவரின் உயிரிழப்புக்கு காவலர்கள் நடத்திய தாக்குதல் தான் காரணம் என்பது உறுதி செய்யப்பட்ட பிறகும் கூட, அதற்கு காரணமானவர்களை காவல்துறை இதுவரை கைது செய்யாதது கண்டித்தக்கது.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் வட்டம் விக்கிரமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காசாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் செம்புலிங்கம். வேளான் தொழில் செய்து வரும் இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர் ஆவார். இவரது புதல்வர் மணிகண்டன் திண்டுக்கல்லில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படித்து வருகிறார்.
செம்புலிங்கத்தின் மருமகன் அருண்குமார் மீது அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அளித்த புகார் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அது குறித்து அருண்குமாரை விசாரிப்பதற்காக குற்றப்பிரிவு தலைமைக் காவலர் பழனிவேல் என்பவர் தலைமையில் 8 காவலர்கள் கடந்த நவம்பர் 25&ஆம் தேதி செம்புலிங்கம் வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால், வீட்டில் அருண்குமார் இல்லை என்று தெரிகிறது.
அதனால் ஆத்திரமடைந்த பழனிவேல் தலைமையிலான காவலர்கள் வீட்டில் இருந்த செம்புலிங்கம், அவரது மனைவி சுதா, மகன் மணிகண்டன் ஆகிய மூவரையும் கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர். அதனால் காயமடைந்த மூவரும் அரியலூர் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வீடு திரும்பினார்கள். அப்போதிலிருந்தே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த செம்புலிங்கம் நேற்று உயிரிழந்து விட்டார்.
காவலர்கள் தாக்கியதால் ஏற்பட்ட உடல்நல பாதிப்புகள் தான் அவரது இறப்புக்குக் காரணம் என்று செம்புலிங்கம் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். அவர்களின் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
காவல்துறையினர் தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த போது, காவல்துறையினருக்கு அளித்த வாக்குமூலத்தில் தமக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்தும், தம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும் செம்புலிங்கம் தெளிவாக விளக்கியுள்ளார். மருத்துவமனையில் அவருக்கு மருத்துவம் அளிக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களிலும் காவல்துறையினர் தாக்கியது தான் அவரது காயங்களுக்கு காரணம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்வளவுக்கு பிறகும் உழவர் செம்புலிங்கத்தை தாக்கிய காவலர்களை கைது செய்ய காவல்துறை தயங்குவது ஏன்? எனத் தெரியவில்லை.
அருண்குமார் மீது அளிக்கப்பட்ட புகார் மிகவும் சாதாரணமானது.
அது குறித்து அருண்குமாரிடம் விசாரிப்பதற்காக 8 பேர் கொண்ட காவல்படை செம்புலிங்கத்தின் வீட்டிற்கு சென்றிருக்கத் தேவையில்லை. செம்புலிங்கத்தையும், அவரது குடும்பத்தினரையும் 8 காவலர்கள் கொண்ட படையினர் சுற்றிவளைத்து தாக்கியதை வைத்துப் பார்க்கும் போது இது திட்டமிட்ட தாக்குதலோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.
குற்றப்பிரிவு தலைமைக் காவலர் பழனிவேலின் கடந்த கால செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
குற்றஞ்சாட்டப்பட்ட அருண்குமார் வீட்டில் இல்லாத சூழலில், அவர் மீதான புகாரில் எந்த வகையிலும் சம்பந்தப்படாத செம்புலிங்கம், சுதா, மணிகண்டன் ஆகியோரிடம் விசாரிக்க காவல்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆனால், சட்டத்தையும், அதிகாரத்தையும் மீறி விசாரணை நடத்திய காவல்துறையினர், மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்து விட்டு மூவரையும் கடுமையாக தாக்கியிருக்கின்றனர்.
அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவர்களை காப்பாற்றுவதற்கு காவல்துறையினர் முயன்றால் அதை பா.ம.க. வேடிக்கை பார்க்காது. செம்புலிங்கத்தின் மரணத்திற்கு காரணமான 8 காவலர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். 8 காவலர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். உயிரிழந்த செம்புலிங்கம் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதிக்கேற்ற அரசு வேலை வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
Previous articleSBI vs HDFC vs ICICI vs PNB: எந்த வங்கிகள் குறைந்தகால FD-களுக்கு அதிக வட்டியை தருகிறது ?
Next articleஉடற்பயிற்சி செய்யும்போது அதிகமாக வலி ஏற்படாமல் இருக்க இனிமே இதை பின்பற்றுங்கள் !