இரவு நேரத்தில் சாலையில் நடந்து செல்ல தடை? துணை காவல் கமிஷனரின் டுவிட்டர் பதிவு!
பெங்களூரை சேர்ந்த கார்த்திக் என்பவர் அவருடைய மனைவியுடன் அவருடைய நண்பரின் பிறந்தநாள் விழாவிற்கு சென்று இரவு 12.30 மணியளவில் வீடு திரும்பியுள்ளனர்.அப்போது அவர்கள் இருவரும் சாலையில் நடந்து வந்துள்ளனர்.அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
மேலும் அவர்களின் அடையாள அட்டை மற்றும் போன் போன்றவற்றை பிடுங்கி வைத்துள்ளனர்.இரவு 11 மணிக்கு பிறகு இவ்வாறு சாலையில் நடந்து செல்ல கூடாது எனவும் அதற்கு அனுமதி கிடையாது எனவும் கூறியுள்ளனர்.அதனை கேட்ட அதிர்ச்சி அடைந்த தம்பதி இப்படி ஒரு விதி இருப்பது குறித்து எங்களுக்கு தெரியாது என்றும் கூறியுள்ளனர்.
அதனையடுத்து போலீஸார் அபராதத்தொகை 3000 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.அப்போது அந்த தம்பதி எங்களிடம் 3000 ரூபாய் தொகை இல்லை என கூறியுள்ளனர்.அதன் பிறகு தம்பதியை தொடர்ந்து மிரட்டிய போலீஸார் பின்னர் அவர்களிடம் இருந்து 1000 ரூபாய் தான் இருக்கின்றது என கொடுத்துள்ளனர். அந்த தொகையை வாங்கிய பின்னரே அவர்களை போக அனுமதித்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திக் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.அதனை கண்ட பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.அதனை தொடர்ந்து பெங்களூர் துணை காவல் கமிஷனர் அனூப் ஷெட்டி டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்.
அதில் இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட போலீஸாரை அடையாளம் கண்டு அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.மேலும் இதுபோல வேறு யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.