கஞ்சா போதை காரணமாக திருவண்ணாமலை மாவட்டம், ஓரந்தவாடி மோட்டூர் கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொடூரமாக படுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து கஞ்சாவஒ ஒழிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த ஓரந்தவாடி மோட்டூர் கிராமத்தில் பழனி என்ற உழவர், அவரது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளை கொடூரமாக வெட்டி படுகொலை செய்து விட்டு, தாமும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த கொலைகளுக்கு கஞ்சா போதை தான் காரணம் என்று வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் கீழ்க்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான பழனி, செங்கத்தை அடுத்த ஓரந்தவாடி மோட்டூர் கிராமத்தில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். அவருக்கு மனைவி, 5 பெண்குழந்தைகள் மற்றும் ஓர் ஆண் குழந்தை இருந்தனர். முதல் மகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில், மற்றவர்கள் மோட்டூர் கிராமத்தில் வாழ்ந்து வந்தனர். நேற்று அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் 5 குழந்தைகளை சரமாரியாக கொடுவாளால் வெட்டிய பழனி, தாமும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் மனைவியும், 4 குழந்தைகளும் உயிரிழந்து விட்ட நிலையில், ஒரு குழந்தை மட்டும் மேல்சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மனிதர்களால் கற்பனை செய்து பார்க்க முடியாத இந்த கொலைகள் மற்றும் தற்கொலைக்கு கஞ்சா போதைதான் காரணம் என்று தெரியவந்துள்ளது. உழவர் பழனிக்கும், அவரது மனைவிக்கும் நீண்ட காலமாகவே தகராறு இருந்து வந்துள்ளது. மிகப்பெரிய அளவில் கடன்சுமையும் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் பழனி கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானதாக தெரிகிறது. நாளுக்கு நாள் அவரது கஞ்சா பழக்கம் அதிகரித்து, ஒரு கட்டத்தில் அவர் மீட்க முடியாத அளவுக்கு கஞ்சாவுக்கு அடிமையாகியுள்ளார். அதனால், அவரது குடும்பத்தில் முற்றிலுமாக அமைதி குலைந்த நிலையில்தான், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் உறக்கத்தில் இருந்த மனைவியையும், குழந்தையையும் கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த படுகொலைகளுக்கு கஞ்சா போதை தான் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட குழந்தைகள் நால்வரும் 15 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களில் இருவர் 6 வயதுக்கும் குறைந்தவர்கள். நன்றாக படித்து சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வந்திருக்க வேண்டிய அவர்கள், தந்தையின் கஞ்சா பழக்கம் காரணமாக வாழ்க்கையை இழந்திருக்கிறார்கள். கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் எத்தகைய சீரழிவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இதைவிட மோசமான உதாரணம் இருக்க முடியாது. அதனால் தான், தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்து விட்டதை சுட்டிக்காட்டி, அவற்றை ஒழிக்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.
குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டம் தமிழகத்தின் கஞ்சா சந்தையாக மாறி வருகிறது. திரும்பிய திசையெல்லாம் கஞ்சா தடையில்லாமல் கிடைக்கிறது. மலைப்பாதை தான் கஞ்சா சந்தையின் மையமாக விளங்குகிறது. ஆனால், கஞ்சாவை கட்டுப்படுத்த எந்தவித ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளும் எடுக்கப்பட வில்லை. செங்கம் பகுதியில் பிஞ்சூர், செய்யாறு மேட்டுத்தெரு, வந்தவாசி கோட்டை, ஆரணி பையூர், தண்டராம்பட்டு தேரடி, கலசப்பாக்கம் பேருந்து நிலையம், போளூர் அல்லிநகரம், வேட்டவலம், ஜவ்வாது மலை போன்ற பகுதிகளில் 24 மணி நேரமும் கஞ்சா வணிகம் களை கட்டுவதாக செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் குறிப்பாக கஞ்சா வணிகத்தை ஒழிக்க ஓராண்டாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் படுவதாக காவல்துறை அறிவிப்பு செய்து வரும் போதிலும், அதனால் எந்த பயனும் இல்லை. என்ன செய்தும் கஞ்சாவை கட்டுப்படுத்த முடியவில்லையே என மாவட்ட காவல் அதிகாரியே புலம்பும் நிலை திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலவுகிறது. கஞ்சா வணிகம் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கொள்ளை, வழிப்பறி, குடும்ப வன்முறை உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்து விட்டன. கொலைகள், தற்கொலைகள் அதிகரித்திருப்பதற்கும் கஞ்சா வணிகம்தான் காரணம் என்பதை மறுக்கமுடியவில்லை.
தமிழ்நாட்டை போதையின் பிடியிலிருந்து மீட்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். கஞ்சா வணிகத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் போதை ஒழிப்பு தீவிரப்படுத்தப்பட வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் கஞ்சா வணிகத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய அனைத்து நிலை காவல் அதிகாரிகளையும் சிறப்புக் காவல்படைக்கு மாற்றி விட்டு, துணிச்சலான, நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். தேவைப்பட்டால் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதற்காக சிறப்பு அதிகாரி ஒருவரை அரசு நியமிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.