2023-ல் நீட் நுழைவுத்தேர்வு அட்டவணை!! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!
அகில இந்திய அளவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் உள்ள பொது மருத்துவம், பல் மருத்துவம் ஆகியவற்றில் சேருவதற்காக அகில இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவு மற்றும் தகுதித் தேர்வுதான் நீட். இந்த நுழைவுத் தேர்வானது அகில இந்திய மருத்துவ குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளுக்கான அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் கட்டுப்பாட்டில் வரும் மருத்தவ கல்லூரிகளின் சேர்க்கைக்கான தகுதியை நிர்ணயிப்பதற்கான தேர்வு ஆகும்.
இந்த தேர்வானது அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கும் தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு 2023-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு எப்போது என்ற கேள்வி எழுந்த நிலையில் மே மாதம் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு தேசிய முகமையால் நடத்தப்படும் நிலையில் 2023-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- 2023 – நீட் நுழைவுத்தேர்வு மே, 7 (ஞாயிற்றுக்கிழமை ) நடைபெறும்.
- பல்கலைகழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வு கியூட் தேர்வு (சியுஇடி) மே 21 முதல் 31 வரை நடைபெறுகின்றன.
- பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ மெயின்தேர்வுகள் முதல் அமர்வு ஜனவரி 24-31 வரையிலும் மற்றும் இரண்டாம் அமர்வு ஏப்ரல், 6,8,10,11,&12 தேதிகளில் நடைபெறும்.
- வேளாண்படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு ஏஐஐஇஏ ஏப்ரல் 26 -29 வரை நடைபெறும்.
என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.