சேலம் மாவட்ட வன்னியர்களை குறி வைக்கும் திமுக எம்பி! விழித்து கொள்ளுமா பாமக
வட தமிழகத்தில் அதிகமாக வசிக்கும் சமூகமான வன்னியர் சமூக மக்களின் ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆட்சியை பிடிக்க முடியாது என்பது பல வருடங்களாக நிரூபிக்கப்பட்டு வரும் உண்மை.
அந்த வகையில் வன்னியர் சமுதாய மக்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தை ஆரம்பித்து அந்த சமுதாய தலைவராக உருவெடுத்தார் மருத்துவர் ராமதாஸ். அவர் ஆரம்பித்த இந்த இட ஒதுக்கீடு போராட்டத்தின் மூலமாக அந்த சமுதாயம் மட்டுமல்லாமல் அத்துடன் சேர்த்து தமிழகம் முழுவதும் உள்ள 108 சமுதாயங்களை இணைத்து இட ஒதுக்கீட்டை அறிவித்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி.
இட ஒதுக்கீடு போராட்டத்தை தொடர்ந்து மருத்துவர் ராமதாஸ் வன்னியர்கள் அரசியல் அங்கீகாரம் பெற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியை ஆரம்பித்தார். இதனால் வன்னியர் சமுதாய மக்கள் பெரும்பாலும் பாமகவை ஆதரிக்க தொடங்கினர். இதன் பிறகு தமிழகத்தில் நடந்த ஒவ்வொரு தேர்தலிலும் பாமக ஆதரவு பெற்ற கட்சிகளே ஆட்சியமைக்க முடிந்தது. ஆனால் சமீபத்தில் நடந்த சில தேர்தல்களில் அந்த எதிர்பார்ப்பு முறியடிக்கப்பட்டது.
பல ஆண்டுகளாக பாமகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட இரு பெரும் திராவிட கட்சிகள் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க முடியாத சூழ்நிலையில் பாமக மாறி மாறி கூட்டணி அமைத்தது என்ற கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து வைத்தன. இதன் பலனாக பாமக சரிவை சந்தித்தது. பின்னர் நிலைமையை சமாளிக்க அன்புமணி ராமதாஸ் அவர்களை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தனியாக தேர்தலை சந்தித்தது.
இதன் மூலமாகவும் பாமகவின் தொடர்ச்சியான ஆக்க பூர்வமான செயல்பாடுகள் காரணமாகவும் இழந்த செல்வாக்கை தற்போது மக்கள் மத்தியில் பெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 7 இடங்களில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியை தழுவியது. ஆனால் அதே நேரத்தில் அப்போது நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி போதுமான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து கொள்ள பாமகவின் வாக்குகள் பெரிதும் உதவியது.
மக்களவை தேர்தல் ஆரம்பித்தது முதல் திமுக அதிமுகவை விமர்சிப்பதை விட அதன் கூட்டணி கட்சியான பாமகவை வழக்கத்தை விட அதிகமாக விமர்சித்து வந்தது. குறிப்பாக தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் S.R. பார்த்திபன் உள்ளிட்டோர் பாமகவை கடுமையான முறையில் விமர்சனம் செய்தனர். அதே போல விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவை தோல்வியுறச் செய்ததில் பாமக பெரும்பங்கு வகித்தது.
தங்கள் வசம் இருந்த அந்த இரண்டு தொகுதிகளையும் திமுக அதிமுகவிடம் பறிகொடுத்தது. மேலும் முரசொலி அலுவலகம் தொடர்பான மூலப் பத்திர விவகாரத்தை கிளப்பி விட்ட பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அக்கட்சியை நீதி மன்றம் வரை இழுத்து சென்று விட்டது அக்கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் பாமகவின் வாக்கு வங்கியை குறி வைத்து திமுகவினர் செயல்பட ஆரம்பித்தனர்.
அந்த வகையில் நடந்து முடிந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் குறிப்பாக வன்னியர்கள் அதிமாக வசிக்கும் மேட்டூர்,எடப்பாடி போன்ற தொகுதிகளில் திமுகவை பலப்படுத்தும் வகையில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் S.R பார்த்திபன் சுற்று பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். இந்த சுற்று பயணத்தின் போது அதிமுக மற்றும் பாமகவில் உள்ள வன்னியர்களை குறிப்பிட்டே பேசி வருகிறார்.
ஏற்கனவே இவர் வீர வன்னியர் பேரவை மற்றும் விஜயகாந்த் அவர்களின் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளில் பதவி வகித்து வந்துள்ளார்.மேலும் தேமுதிக சார்பாக எம்.எல்.ஏ வாகாவும் பதவி வகித்து வந்துள்ளதால் சேலம் மாவட்டத்தில் அவருக்கு ஓரளவு செல்வாக்கு உள்ளது. இதனை பயன்படுத்தி தன்னுடைய சமுதாயமான வன்னியர் சமுதாய மக்களை திமுகவிற்கு இழுக்கும் பணியை ஆரம்பித்துள்ளார்.
சேலம் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் பாமகவின் செல்வாக்கு வளர்ந்து வரும் நிலையில் இவரின் செயல்பாடு பாமக தொண்டர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாமக அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது பிடிக்காமல் இருக்கும் தொண்டர்களை வைத்து காய் நகர்த்தும் திமுகவின் இது போன்ற செயல்பாடுகள் பாமகவின் வாக்கு வங்கியை அசைத்து பார்க்குமா? அல்லது அதற்குள் பாமக தலைமை விழித்து கொள்ளுமா? என்று காத்திருந்து பார்ப்போம்.