பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சுழற்சி இப்பொழுது பலருக்கும் நல்லதொரு விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் அதன் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் மாதவிடாய் நாட்களில் விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மாதவிடாய் பற்றி விவாதம் செய்யவோ அல்லது மாதவிடாய் நாட்களில் விடுமுறை கேட்கவோ பெண்கள் தயக்கம் காட்டக்கூடாது என நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இப்பேற்பட்ட நல்ல விஷயத்தை செய்தது ஓரியண்ட் எலெக்ட்ரிக் நிறுவனம் தான். இந்நிறுவனம் மின்விசிறிகள், ஏர் கூலர்கள், வாட்டர் ஹீட்டர்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் எல்இடிகள் போன்றவற்றை தயாரிப்பதில் புகழ்பெற்று விளங்குகிறது.
ஸ்விக்கி, சோமாட்டோ, ஜெய்பூர்குர்தி.காம் போன்ற வணிகங்கள் ஏற்கனவே அதன் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கி வரும் நிலையில், தற்போது இந்த பட்டியலில் ஓரியண்ட் நிறுவனமும் சேர்ந்திருக்கிறது. இதுகுறித்து கடந்த புதன்கிழமை ஓரியண்ட் எலக்ட்ரிக் நிறுவனத்தின் CHRO ஆதித்யா கோஹ்லி கூறுகையில், எங்கள் நிறுவனத்தின் நிலையான வெற்றிக்கு காரணம் அதிகளவிலான பெண் ஊழியர்களின் உழைப்பு தான் . நாங்கள் வழக்கமாக பெண்களுக்காக ஒர்க்கஷாப்களை நடத்தி வருகிறோம், அதில் எங்கள் பெண் ஊழியர்களின் அனுபவங்கள் மற்றும் குறிக்கோள்களைப் பற்றி நாங்கள் கேட்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், பெண்கள் மாதவிடாய் பற்றி பேசவோ அல்லது அந்த சமயத்தில் விடுப்பு கேட்கவோ தயங்கக்கூடாது மற்றும் எவ்வித அவமானத்தையும் சந்திக்கக்கூடாது என நாங்கள் நம்புகிறோம் என்றும் பெண்களின் பாதுகாப்புக்கென பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தப்போவதாகவும் கூறியுள்ளார்.