தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாரா தனது சமீபத்திய ஹாரர் படமான ‘கனெக்ட்’ படத்திற்கு ப்ரோமோஷன் செய்யும் விதமாக பேட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். பெரும்பாலும் இவர் படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை, தனது கணவர் தயாரிக்கும் படமென்பதால் ‘கனெக்ட்’ படத்திற்கு ப்ரோமோஷன் செய்ய நயன்தாரா வருகிறார் என பேசப்பட்டது. இந்நிலையில் நடிகை நயன்தாரா தான் ஏன் இவ்வளவு நாட்களாக ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்தேன் பேசியுள்ளார். இதுதவிர திருமணம், தாய்மை மற்றும் தனது 20 ஆண்டுகால சினிமா பயணம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
தனது திரைப்பயணம் குறித்து நயன்தாரா பேசுகையில், திரையுலகில் நான் 20 வருடங்கள் கடந்திருப்பதை என்னால் சில சமயங்களில் நம்பமுடியவில்லை, என் வாழ்வில் இந்த 20 வருடங்களிலும் பல கட்டங்கள் இருந்தது அவை அனைத்தும் அருமையாகவே இருந்தது. நான் மிக இளம்வயதில் எனது சினிமா பயணத்தை தொடங்கினேன், 18 வயதில் தொடங்கிய எனது பயணம் அப்படையே சென்றது. சினிமா வரலாற்றில் என்னுடைய பெயர் எப்போதும் பேசப்பட வேண்டும் என்று நினைத்தேன், கடவுள் அருளால் அதை நான் சாதித்துவிட்டேன். பெரும்பாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய படங்கள் எதுவும் வெளிவருவதில்லை, ஏன் பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்பதை நினைத்து நான் ஆச்சர்யப்பட்டேன்.
படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூட கதாநாயகிகளை ஒரு ஓரமாக தான் வைக்கின்றனர். இதனால் தான் நான் பட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்தேன், சினிமா துறையில் ஆண் நடிகர்களுக்கு சமமாக பெண் நடிகைகளையும் நடத்த வேண்டும். சமமாக நடத்தவிட்டாலும் அவர்களுக்கு முக்கியத்துவமாவது கொடுக்க வேண்டும் என்று நயன்தாரா கூறியுள்ளார்.