சி.ஏ.ஏ அல்லது 370-வது பிரிவு நீக்கத்தால் சுற்றுலா பாதிக்கப்படவில்லை: திரு. பிரகலாத் சிங் பட்டேல் அறிவிப்பு
2019-ல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. சி.ஏ.ஏ அல்லது 370-வது பிரிவு நீக்கத்தால் சுற்றுலா பாதிக்கப்படவில்லை என மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சர் திரு. பிரகலாத் சிங் பட்டேல் அறிவித்துள்ளார்.
மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சர் திரு. பிரகலாத் சிங் பட்டேல், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை விவரத்தை வெளியிட்டார். 2019-ஆம் ஆண்டு கடைசி இரண்டு மாதங்களை, 2018ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, அதிக வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவுக்கு வந்துள்ளதை இது, எடுத்துக்காட்டுகிறது.
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருப்பது குறித்து கூறிய திரு. பட்டேல், பிரதமர் திரு. நரேந்திர மோடி நமது விளம்பரத் தூதராக திகழ்வதால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது என்றார். சீன அதிபர் திரு. ஸீ ஜின்பிங் உடனான பிரதமரின் சந்திப்பிற்குப் பின்னர், தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகேயுள்ள மாமல்லபுரத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 35 சதவீதம் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
ஜம்மு காஷ்மீரில் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து, ராமர் கோவில் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு, அண்மையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றால் பிரச்சினைகள் ஏற்பட்ட போதிலும், 2019ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது என்று திரு. பட்டேல் மேலும் கூறினார். 9 நாடுகள் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் பயணம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்திய போதிலும், சுற்றுலாத் துறை முன்னேற்றத்தை கண்டுள்ளதாக சுற்றுலா அமைச்சகத்தின் தரவு கூறுகிறது.
அமைச்சர் பகிர்ந்து கொண்ட விவரங்களின்படி, 2018 நவம்பர் மாதம், 10,12,569 வெளிநாட்டுப் பயணிகள் வருகையுடன் ஒப்பிடும்போது, 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 7.8 சதவீதம் அதிகரித்து, 10,91,946 ஆக இருந்தது. இதேபோல, 2018 டிசம்பரில் 11,91,498 ஆக இருந்த வெளிநாட்டுப் பயணிகளின் வருகை, 2019 டிசம்பர் மாதம், 12,25,672-ஆக அதிகரித்தது.
2019-ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களை 2018-ஆம் ஆண்டின் அதே மாதங்களுடன் ஒப்பிடுகையில், அந்நியச் செலாவணி வருவாயும் அதிகரித்திருப்பதை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2018-நவம்பர் மாதம் ரூ. 16,584 கோடியாக இருந்த வருவாய் 2019-ல் ரூ.19,831 கோடியாக உயர்ந்தது. 2018 டிசம்பரில் ரூ.19,474 கோடியாக இருந்த அந்நியச் செலாவணி வருவாய், 2019 டிசம்பரில் ரூ. 22,617 கோடியாக அதிகரித்தது.
2019 செப்டம்பர் மாதத்தில், அதாவது 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பின்னர், 2018ஆம் ஆண்டு அதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 4.3 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல, இந்த காலகட்டத்தில் அந்நியச் செலாவணி வருவாயும், 11 சதவீதம் உயர்ந்துள்ளதாக சுற்றுலா அமைச்சகத்தின் தரவு தெரிவிக்கிறது.
Source: PIB