அஜித் ரசிகர்களுக்கு அதிரடி சரவெடி! துணிவு விமர்சனம்

0
130

அஜித் ரசிகர்களுக்கு அதிரடி சரவெடி! துணிவு விமர்சனம்

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேவியூ புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து வினோத் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில் அஜித் குமார், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, நடித்த படம் தான் துணிவு!

அஜித் ரசிகர்களுக்கு பொங்கல் இனிப்பாக வெளியாகி இருக்கிறது. இந்த வருடம் ஒரே நாளில் அஜித் மற்றும் விஜயின் படங்கள் எட்டு வருடங்களுக்குப் பின் மோதுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சமீபத்தில் வெளியான அஜித் படங்களில் நேர்கொண்ட பார்வை, வலிமை, ஆகியவற்றில் ஏமாற்றியதை இந்த படத்தில் ஒட்டுமொத்தமாக ஈடு செய்து விட்டார். அஜித்தின் ரசிகர்களுக்கு எவ்வாறு அஜித்தை பிடிக்குமோ அவ்வாறே நடிக்க வைத்திருக்கிறார் வினோத். காட்சிக்கு காட்சி அஜித்தின் அதிரடியும் நடிப்பும் ஆட்டமும் ரசிகர்களை வெகுவாக எகிற வைத்துள்ளனர்.

துணிவு படத்தின் திரைக்கதை விமர்சனம்:

சென்னையில் உதவி கமிஷனரும் மற்றும் சிலரும் சேர்ந்து அங்குள்ள யூவர்ஸ் பேங்கில் 500 கோடி கொள்ளை அடிக்க திட்டமிடுகின்றனர். அவர்கள் கொள்ளை அடிக்கச் சென்ற நேரத்தில் எதிர்பாராத திருப்பமாக சர்வதேச கேங்ஸ்டர் ஆக என்ட்ரி ஆகி அவர்களையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார் அஜித்குமார்.

உண்மையில் கொள்ளை அடிக்க வந்தவர்கள் யார் என தெரியாமல் கமிஷனர் சமுத்திரகனி தலைமையில் ஒரு குழு அமைத்து அஜித்திடம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். ஆனால் உண்மையில் பேங்கில் கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்களை எவ்வாறு அஜித்குமார் வெளிச்சம் போட்டு காட்டுகிறார் என்பதுதான் மீதி கதை.

வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் எவ்விதமாக கொள்ளையடிக்கின்றனர் என்பதை மையக்கருவாக கொண்டு அதிரடி ஆக்சன் கதையில் கலக்கி இருக்கின்றனர். மியூச்சுவல் ஃபண்ட்,மினிமம் பேலன்ஸ், கிரெடிட் கார்டு, போன்ற விஷயங்களில் எவ்வாறு நாம் ஏமாறுகிறோம் என படம் பார்ப்பவர்களுக்கும் ஒருவித பாடத்தை கற்பிக்கிறார்கள்.

படம் ஆரம்பமான சில நிமிடங்களில் அதிரடியாக என்ட்ரி கொடுக்கும் அஜித்தின் பர்ஃபார்மன்ஸ் இதுவரை இல்லாத ஒன்று. அந்த அதிரடி தொடர்வது தான் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். மங்காத்தா படத்திற்குப் பிறகு ஒரு நெகட்டிவ்  கேரக்டரில் தோன்றியுள்ள அஜித் ஒன் மேன் ஆர்மியாக படம் முழுவதும் இதுவரை பார்க்காத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தனது ரசிகர்களை முழு திருப்தி படுத்துவதற்காகவே இத்தகைய நடிப்பை இந்த படத்தில் அஜித் கொடுத்து கலக்கியுள்ளார்.

படத்தின் நாயகியாக வரும் மஞ்சுவாரியருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அவரது நடிப்பு நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.

நேர்மையான போலீஸ் கமிஷனர் ஆக வரும் சமுத்திரக்கனி நம்மை சபாஷ் போட வைக்கிறார். மேலும் கான்ஸ்டபிளாக மகாநதி சங்கர், பேங்க் மேனேஜராக ஜி.எம்.சுந்தர், படத்தின் மெயின் வில்லனாக பேங்க் சேர்மனாக வரும் ஜான் கோகேன், டிவி நிருபராக வரும் மோகனசுந்தரம், இன்ஸ்பெக்டராக வரும் பகவதி பெருமாள் அவர்களுக்கு கொடுத்த வாய்ப்பை கச்சிதமாக நடித்து கொடுத்த வாய்ப்பில் விளாசி உள்ளனர்.

ஜிப்ரானின் இசையில் அதிரடியான சண்டை காட்சிகளை அமைத்த சுப்ரீம் சுந்தருக்கு நிறைய பாராட்டுகள்.  படத்தில் நடித்த குண்டுகள் நம்மிடையே வெடித்தது போல் காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு. எத்தனை குண்டுகள் சுடப்பட்டது. பாம்கள் வெடித்தது என்று நம்மால் கணக்கிட முடியாது.

படத்தின் ஃப்ளாஷ் பேக்கை சுருக்கமாக சொல்லி தேவையற்ற காட்சிகள் என்று படத்தில் எதுவும் இல்லை என்று சொல்லும் வண்ணம் காட்சிக்கு காட்சி விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளனர். வங்கிகள் காட்டும் எந்த ஒரு விண்ணப்பத்திலும் தேவையற்ற கையெழுத்துக்கள் போட வேண்டாம்.  பணத்திற்கு பேராசைப்பட வேண்டாம். என கடைசியாக உபயோகமான கருத்தையும் சொல்லி படத்தை முடித்துள்ளனர். மொத்தத்தில் படம் துணிவே துணை என மாஸ் கலக்கல். தாராளமாக அனைவரும் பார்க்கலாம்.

 

 

Previous articleபொங்கல் பரிசு வழங்குவதில் திடீர் மாற்றம்! அரசு வெளியிட்ட தகவல்!
Next articleஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க முடிவு! தொடக்க கல்வி இயக்குனர் வெளியிட்ட முக்கிய தகவல்!