கழிவறையை சுத்தம் செய்த அரசு பள்ளி மாணவர்கள்! படிப்பதற்கு தானே அனுப்பினோம் என கொந்தளிக்கும் பெற்றோர்!
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தான் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் செயல்பட தொடங்கி உள்ளது.இந்நிலையில் கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகளில் பயின்று வந்த மாணவர்களில் பெரும்பாலானோர் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சங்கம்பட்டி முத்துமாரியம்மன் நகரில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது.
இந்த பள்ளியில் சுமார் 200 மாணவர்கள் படித்து வருகின்றனர்.மேலும் இந்த பள்ளியில் 1 தலைமை ஆசிரியர் உட்பட 12 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில் அந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் அந்த பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அந்த வீடியோவில் பள்ளி சீருடையில் இருக்கும் 2 மாணவர்கள் தண்ணீர் பிடித்து கழிவறையில் ஊற்றி சுத்தம் செய்கின்றனர்.அதுமட்டுமின்றி மாணவிகள் சிலர் பள்ளி வளாகத்தில் உள்ள குப்பைகளை பெருக்கி சுத்தம் செய்வது, ஒட்டடை அடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.அந்த வீடியோவை மற்றும் புகைப்படங்களை கண்ட மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் பள்ளிக்கு படிப்பதற்கு அனுப்பிய தங்கள் குழந்தைகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ளது வேதனை அடைந்துள்ளனர்.இவ்வாறான சம்பவம் மக்கள் மத்தியில் அரசு பள்ளியின் மீதான வெறுப்புணர்வை ஏற்படுத்துவதாக உள்ளது.இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தில்வேல்முருகன்,சக்கம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வந்தார்.மாணவர்கள் கழிவறை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் குறித்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.
மேலும் இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நேற்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்பில் மாணவர்களை பள்ளிகளில் படிப்பதை தவிர வேறு எந்த வேலையிலும் ஈடுபடுத்த கூடாது என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.