திமுக கூட்டணிக்கு ஆப்பு வைத்த திருமா! தலைமைக்கு பறந்த புகார்
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்ததுக்கு அப்போதைய ஆளும் கட்சியின் மீதான அதிருப்தி காரணமாக கூறப்பட்டாலும், திமுக அமைத்த பலமான கூட்டணியே அதற்கு பெரிதும் உதவியது. இந்நிலையில் இந்த பலமான கூட்டணிக்கு ஆப்பு வைக்கும் வகையில் திமுக கூட்டணியில் இருக்கும் விசிக தலைவர் திருமாவளவன் பேசியது கூட்டணி கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் திமுக மற்றும் அதிமுக என இரு கட்சிகளும் பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிமுக கூட்டணியில் பாமக விலக, OPS தனித்து நிற்பதாக கூறி பிறகு வேட்பாளரை வாபஸ் பெற்றது உள்ளிட்ட பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது.
ஆனால் திமுகவில் சட்டமன்ற தேர்தலில் உருவான அதே கூட்டணியே தொடரும் நிலையில் தற்போது புதிய வரவாக மக்கள் நீதி மய்யம் கட்சியும் கூடுதலாக இணைந்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் தொடர்ந்து அக்கட்சியின் செயல்பாடுகளை விமர்சித்து வந்த நடிகர் கமல்ஹாசன் ஒரு கட்டத்தில் தனிக் கட்சியை ஆரம்பிப்பதாக அறிவித்தார். அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்தார்.
இதையடுத்து அடுத்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்கு வங்கியை பெற்று தமிழக அரசியல் கட்சி தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்தார். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற 2021 சட்டமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி மற்றும் நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்டவைகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் அவருடைய கட்சி வெற்றி பெறாவிட்டாலும் கணிசமான வாக்குகளை பெற்று மீண்டும் தமிழக அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் பாஜகவின் வானதி சீனிவாசனுக்கு கடைசி வரை டப் கொடுத்தார்.இதில் அவர் காங்கிரஸ் வேட்பாளரை 3 ஆம் இடத்திற்கு தள்ளி இரண்டாம் இடத்தை பெற்றார்.
இந்நிலையில் தான் தற்போது நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே நேரத்தில் ஒரு தரப்பு அவர் திமுகவுடன் கூட்டணி வைப்பார் என்று பேசி வந்தனர். அந்த வகையில் அவர் தற்போது திமுக கூட்டணியில் இணைந்துள்ளார்.
அதன் அடிப்படையில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார்.ஏற்கனவே இவர் ராகுல் காந்தி நடத்திய இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.அதன் அடிப்படையில் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சியுடன் கூட்டணி வைக்கவும் வாய்ப்புள்ளது என்று பேசப்பட்டது.
நடந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கொங்கு மண்டலத்தில் மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்கு வங்கியை கொண்டுள்ளது.இதன் அடிப்படையில் தான் அக்கட்சியை திமுக கூட்டணிக்கு வர வைத்துள்ளனர்.ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வாக்கு வங்கி கூட்டணிக்கு பலம் சேர்க்கும் என்று நான் கருதவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளது கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதே நேரத்தில் கூட்டணி கட்சிக்கு கமல்ஹாசன் ஆதரவு அளித்துள்ளதை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கூட்டணியில் உள்ள தங்களை பற்றி குறைத்து மதிப்பிடுவதா என மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய பிரமுகர் திமுக தலைமையிடம் முறையிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதைக் கேட்ட திமுக தலைமை இது குறித்து விசாரிப்பதாகவும்,மேலும் இது போல நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
பலமான கூட்டணியாக கருதப்பட்ட திமுக கூட்டணிக்கு ஆப்பு வைக்கும் வேலையில் திருமா இறங்கி விட்டாரா என்றும் ஒரு தரப்பு பேசி வருகின்றனர்.