முரசொலி அலுவலக மூலப் பத்திர விவகாரத்தில் பாமகவிடம் மண்டியிட்ட திமுக! உற்சாகத்தில் பாமகவினர்
சமீபத்தில் தமிழகத்தில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது தலித் மக்களின் வாக்குகளை கவர திமுக தலைவர் ஸ்டாலின் அப்போது நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியிருந்த அசூரன் படத்தை பார்க்க சென்றிருந்தார். இதனையடுத்து படம் குறித்தும் பஞ்சமி நில விவகாரம் குறித்தும் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதை கவனித்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடமே பஞ்சமி நிலம் தான் முதலில் அதை உரியவர்களிடம் ஒப்படையுங்கள் என ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்திருந்தார். இவ்வாறு திமுகவின் ஆதரவு பத்திரிக்கையான முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியது.
இந்நிலையில் மருத்துவர் ராமதாஸ் அவர்களை தொடர்ந்து அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் திமுகவிற்கு எதிராக இது குறித்து குற்றம் சாட்டினர்.இதனையடுத்து, பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் இந்த முரசொலி நில விவகாரம் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் புகார் அளித்தார். பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உடனடியாக முரசொலி நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதனை சமாளிக்க முரசொலி நில விவகாரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரிக்க தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுத்தது. மேலும் முரசொலி அலுவலக நிலம் தங்களுடையது தான் என்றும்,இதில் தவறான கருத்தை பரப்பிய பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர். மேலும் மூலப் பத்திர ஆதாரத்தை வெளியிட்டால் இரு மருத்துவர்களும் அரசியலிலிருந்து விலகுவார்களா? என்றும் திமுக தரப்பு கேள்வியெழுப்பிருந்தது.
இந்நிலையில் தற்போது நடந்த இந்த விசாரணையின் போது முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்குவாதாக திமுக தரப்பின் சார்பாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆதாரம் உள்ளது என்று சவால் விட்டு கொண்டிருந்த திமுக தரப்பு திடீரென்று வாடகை கட்டிடம் என பல்டி அடித்துள்ளதை எதிர்க் கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.
இந்நிலையில் திமுகவிற்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்திய இந்த மூலப் பத்திர விவகாரத்தை ஆரம்பித்து வைத்தவரான மருத்துவர் ராமதாஸ் அவர்களும் கடுமையான விமர்சனங்களை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
1. முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்குகிறதாமே…. அப்படியானால், அந்த பட்டா வெளியிட்டது, அரசியலில் இருந்து விலகத் தயாரா? என்று சவால் விட்டதெல்லாம் வழக்கம் போல் வெற்றுச் சவடால் தானா?
2. அரசியல் உலகில் எவ்வளவோ பல்டிகள் அடிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை அனைத்திலும் ஆகச்சிறந்த பல்டி… முரசொலி நிலம் மீதான பழியைத் துடைப்போம் என்று வீர வசனம் பேசி விட்டு, இப்போது நாங்களே வாடகைக்கு தான் இருக்கிறோம் என்று சரண் அடைந்தது தான்?
3. முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் தான் இயங்குகிறது என்பதாவது உண்மையா? மூலப் பத்திரத்தைத் தான் வெளியிடவில்லை. குறைந்தபட்சம் வாடகை ஒப்பந்தத்தையாவது முரசொலி நிர்வாகம் வெளியிடுமா? கூடவே சவால் விட்டவர் அரசியலில் இருந்து விலகுவாரா?
4. அகில இந்தியாவில் மட்டுமல்ல…. ஈரேழு லோகத்திலும் வாடகைக் கட்டிடத்தில் இருந்து கொண்டு உரிமையாளர் சார்பில் அவதூறு வழக்குத் தொடர்ந்த ஒரே கம்பெனி…. நம்ம முரசொலி கம்பெனி தான். வெறும் கையால் முழம் போடுவதில் இவர்களை வெல்ல ஆளே இல்லை போலிருக்கிறது!
முரசொலி அலுவலக மூலப் பத்திரத்தை காட்டினால் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் அரசியலிலிருந்து விலகுவார்களா? என்று சவால் விட்ட திமுகவே தற்போது அவர்களிடம் சரணடைந்து விட்டது தமிழக அரசியலில் திமுகவிற்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. பல நாட்களாக இழுத்து கொண்டிருந்த இந்த விவாதத்திற்கு ஒரு முடிவு கிடைத்துள்ளது.இந்நிலையில் பாமக நிறுவனர் திமுகவிற்கு எதிராக கிளப்பிய குற்றச்சாட்டு இதன் மூலமாக உண்மையாகிறது என்று பாமகவினர் உற்சாகத்துடன் திமுகவை விமர்சித்து வருகின்றனர்.