ஸ்மார்ட்போன்களைத் தாக்கும் கொரோனா ’வைரஸ்’!ஹேக்கர்கள் கைவரிசை!
கொரோனா வைரஸ் சம்மந்தமாக பரப்பப்படும் பார்வேர்ட் மெஸேஜ்களில் ஹேக்கர்கள் வைரஸ்களை அனுப்புவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் 259 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 9000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க சீன மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வருகின்றனர். மக்கள் ஒன்றுகூடலை தவிர்க்க திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை கூட ரத்து செய்ய சொல்லி சீன அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மக்களிடையே கொரோனா வைரஸ் பற்றிய பயம் உருவாகியுள்ள நிலையில் வைரஸ் தாக்குதலில் இருந்து நம்மைக் காத்துக் கொள்வது எப்படி என்பது போன்ற வீடியோக்கள், மற்றும் டெக்ஸ்ட் ஃபைல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிக அளவில் பரப்பப் படுகின்றன. இப்போது அந்த மெஸேஜ்கள் மூலம் வைரஸ்களை ஹேக்கர்கள் அனுப்பி ஸ்மார்ட்போன்களை ஹேக் செய்ய முயலுவதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளன.
இந்த வைரஸ்களோடு வரும் ஃபைல்கள் நம்முடைய சாதனங்களில் உள்ள டேட்டாக்களை அழிக்கும், அல்லது பிரதி (xerox) எடுக்கும் திறன் கொண்டவை. இது மாதிரியான வைரஸ் சம்மந்தமான பைல்களைக் கண்டுபிடிக்க அவற்றின் எக்ஸ்டென்ஷன் வீடியோ பைல்கள் .exe அல்லது டெக்ஸ்ட் பைல்கள் .lnk போன்ற எக்ஸ்டென்ஷன்களோடு இருந்தால் அவற்றை டவுன்லோட் செய்வதைத் தவிருங்கள் என வல்லுனர்கள் சொல்லியுள்ளனர்.