தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பேசிய நடிகர் ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அருணா ஜெகதீசன் ஆணையம் இந்த சம்மனை அனுப்பியுள்ளதாகவும், வரும் 25ஆம் தேதி ரஜினி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
முன்னதாக தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ரஜினிகாந்த் கூறியபோது, ‘பேரணியில் சமூக விரோதிகள் நுழைந்ததால்தான் வன்முறை ஏற்பட்டது. அதனால்தான் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது’ என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விசாரணை ஆணையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் கலந்துகொண்டு, ‘பேரணியில் சமூக விரோதிகள் நுழைந்ததாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அவருக்கு சமூக விரோதிகள் நுழைந்தது குறித்த தகவல்கள் தெரியும். அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக வரும் 25-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என்று ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது.