கொரோனா பீதி முடியும் முன்னே இன்னொரு அச்சுறுத்தலா?சீனாவில் பரவும் மற்றொரு நோய்!
சீனாவில் H5N1 எனும் வைரஸ் மூலம் பரவும் பறவைக்காய்ச்சல் நோய் உருவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 300 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 9000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க சீன மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வருகின்றனர். இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக உள்ளதாக சீன அரசு ஒத்துக்கொண்டுள்ளது. அதேபோல இந்த வைரஸ் எப்படி தோன்றியது என்றும் இதுவரைக் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில் இந்த நோய் பாதிப்பில் இருந்தே இன்னும் மீளாத சீன மக்கள் இப்போது புதியதாக நோய் பீதிக்கு ஆளாகியுள்ளனர். சீனாவில் உள்ள பண்ணை ஒன்றில் மொத்தமுள்ள 8000 கோழிகளில் 4,500 கோழிகளுக்கு பறவை காய்ச்சல் நோய் அறிகுறிகள் இருந்ததால் அவற்றைக் கொன்றுள்ளனர்.
மேலும் நோய் தாக்குவதற்கு வாய்ப்புள்ள 20000 கோழிகளையும் கொல்ல சீன அரசு உத்தரவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. H5N1 என்ற இந்த வைரஸ் நோய் பறவைகளுக்கு சுவாச நோயை ஏற்படுத்தும் தன்மை உடையது எனவும் அது மனிதர்களுக்கும் பரவும் தன்மை கொண்டது என்றும் கூறப்படுகிறது. இதனால் சீன மக்கள் மி்கப்பெரிய அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர்.