டப்பிங் யூனியன் தேர்தல்:சின்மயி மனு தள்ளுபடி: மீண்டும் தலைவர் ஆகிறாரா ராதாரவி?
டப்பிங் யூனியன் தேர்தலில் ராதாரவியை எதிர்த்துப் போட்டியிட்ட பாடகி சின்மயியின் வேட்புமனுவை சங்க விதிகளின் படி தள்ளுபடி செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் பணிபுரியும் டப்பிங் கலைஞர்களுக்கான டப்பிங் யூனியனின் தேர்தல் வரும் 15 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதில் பல ஆண்டுகளாகத் தலைவராக இருக்கும் ராதாரவி மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாடகி சின்மயி போட்டியிடுவதாக அறிவித்தார்.
சின்மயியிக்கும் ராதாரவிக்குமான பிரச்சனை மீ டூ வின் போதே தொடங்கிவிட்டது. மீடூவில் ராதாரவி பல பெண்களிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக ராதாரவிக்கு எதிராக சின்மயி சமுகவலைதளங்களில் போர்க்கொடி தூக்கினார். அப்போது ராதாரவி தலைவராக இருந்த டப்பிங் யூனியனில் இருந்து சின்மயி சந்தா கட்டவில்லை எனக் கூறி நீக்கப்பட்டார். இது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இது சமம்ந்தமாக சில அரசியல் தலைவர்கள் சின்மயிக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல் கொடுத்தனர்.
அப்போது ராதாரவி திமுகவில் இருந்ததால் சின்மயியை பாஜக ஆதரவாளர் எனப் பலரும் கூறினர். பாஜக தலைவர்களும் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். அதன் பிறகு ராதாரவி திமுகவை விட்டுப் பிரிந்து பாஜகவில் சேர்ந்தார். அதையடுத்து டப்பிங் யூனியனுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து ராதாரவிக்கு எதிராக சின்மயி களம் இறங்கினார். இதனால் தேர்தலில் பரபரப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது சின்மயியின் வேட்புமனுவை சங்கவிதிகளின் படி தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளனர்.
இதனால் மீண்டும் ஏகமனதாக ராதாரவியே தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.