பட்ஜெட் தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்குகின்றது! நிதி மசோதா நிறைவேற்றப்படும்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டுத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டுத்தொடர் இதுதான். அந்த வகையில் அன்றைய தினம் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு முதல் முறையாக உரையாற்றினார். மேலும் அதே நாளில் நடப்பு நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பிப்ரவரி ஒன்றாம் தேதி மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அடுத்த நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
மேலும் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தை தொடங்குவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. அதற்கு அதானின் நிறுவனங்கள் மீது அமெரிக்கா சந்தைய ஆய்வு நிறுவனம் ஹண்டன்பர்க் எழுப்பிய மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய அரசு நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும், நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் வேண்டும் என்ற கோரிக்கைகள் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கிளப்பி தொடர் அமளியில் ஈடுபட்டது தான் காரணமாகும்.
ஒரு வழியாக ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நடத்தப்பட்டது. விவாதத்திற்கு பிரதமர் மோடி பதில் அளித்து பேசினார். கடும் அமளிக்கும் மத்திய பட்ஜெட் கூட்டுத்தொடரின் முதல் அமர்வு கடந்த மாதம் 13ஆம் தேதி முடிவடைந்தது. அதன் பிறகு ஒரு மாத காலம் விடுமுறை விடப்பட்டது.துறைவாரியாக மானிய கோரிக்கைகள் குறித்து நாடாளுமன்றம் நிலை குழுக்கள் ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்கு இந்த விடுமுறை பயன்படுத்தப்பட வேண்டும் என்பது மரபு.
இந்நிலையில் பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த அமர்வு அடுத்த மாதம் ஆறாம் தேதி முடிவுக்கு வரும். இந்த இரண்டாவது அமர்வில் மத்திய அரசு நிதி மசோதாவை நிறைவேற்றுவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த நிதியாண்டுக்கான நிதி முன்மொழிகளை நடைமுறைப்படுத்த இந்த நிதி மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.