மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு! நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வரை வரவேற்ற பெண் பைலட்டுகள்!
சென்னை பெரியமேடு நேரு உள் விளையாட்டு அரங்கில் மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது காரில் புறப்பட்டு வந்தார். அவரை பெரியமேடு மசூதியில் இருந்த பெண் காவலர்கள் மோட்டார் சைக்கிளில் அணிவகுத்து பைலட்டுகளாக சுமார் 800 மீட்டர் தூரம் வரவேற்று அழைத்து வந்தனர்.
மேலும் முதல்வரின் காருக்கு முன்பு 6 ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிளில் மூன்று வரிசையாகவும், காருக்குப்பின் ஆறு ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிளில் மூன்று வரிசைகளாகவும் 12 பெண் காவலர்கள் சீருடையுடனும், கம்பீரத்துடனும் வந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழக காவல்துறையில் முதல்வருக்கு மோட்டார் சைக்கிளில் பெண் காவலர்கள் அணிவகுத்து சென்று பைலட்டுகளாக வரவேற்றது இதுவே முதல்முறை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது குறித்து சென்னை பெருநகர் காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி கூறுகையில் பெண் பைலட்டுகளை உருவாக்குவதற்காக ஆயுதப்படையில் பெண் காவலர்களை தேர்வு செய்ய முடிவு செய்தோம், அதன் அடிப்படையில் வாகனம் ஓட்டுனர் உரிமம் உள்ள பெண் காவலர்கள் இந்நிகழ்வில் பங்கேற்கலாம் என அறிவித்திருந்தோம்.
அந்த அறிவிப்பினை ஏற்று விருப்பம் தெரிவித்த 15 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு ஐந்து நாட்கள் தினமும் இரண்டு மணி நேரம் என மொத்தம் 10 மணி நேரம் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் ஓட்ட பயிற்சி வழங்கினோம், இதில் அவர்கள் செய்த சிறு சிறு தவறுகளை திருத்தி முழுமையாக விழாவுக்கு தயார் படுத்திக் கொண்டனர் என கூறப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு 15 பெண் போலீஸாரும் டிஜிபி சைலேந்திரபாபு உடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவர்களுக்கு சைலேந்திரபாபு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.