காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்! பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்!
கோவை மாநகராட்சியில் 3600 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் ஊதியம் அவர்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குப்பைகள் அகற்றிட தூய்மை பணிகளை தனியார் வாசம் ஒப்படைக்க உள்ளதாகவும் அதற்கான ஒப்பந்த புள்ளி திறக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதனைத் தொடர்ந்து தூய்மை பணியில் தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்று ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் பணிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கப்பட உள்ளதாக தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் சங்கத்தினருடன் மாநகராட்சி அதிகாரிகள் தொழிலாளர் நலத்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முடிவும் கிடைக்காமல் தோல்வியடைந்தது. இந்நிலையில் இன்று முதல் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இதில் கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.