அதிமுகவுடன் கூட்டணி தொடர்வதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தகவல்!!
தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் நாட்டிலுள்ள பல கட்சிகளுடன் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்து மத்தியில் ஆட்சி நடத்தி வருகிறது பாஜக, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி வந்தாலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பலம் பொருந்திய அணியாக உள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் அங்கு பெரும் பலத்தோடு உள்ள கட்சிகளின் தலைமையில் கூட்டணி வைத்துள்ளது பாஜக, அதன்படி தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தல்களை சந்தித்து வருகிறது. அதிமுகவில் ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்ற நிலையில், அவரது மறைவிற்கு பின் அன்றைய அதிமுகவின் நிலைமையில் பாஜகவுடன் கூட்டணி வைத்தாக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் கூட்டணி வைக்கப்பட்டது.
பாஜகவுடன் கூட்டணி வைத்த நாள் முதல் இன்று வரை பல்வேறு சிக்கல்களையும் அதிமுக சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது, இதனிடையே நடந்து முடிந்த ஈரோடு இடைத் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு பாஜகவுடன் கூட்டணி வைத்தது தான் காரணம் என அதிமுக முன்னணி தலைவர்கள் பகிரங்கமாகவே குற்றம் சாட்டி வந்த நிலையில், இந்த கருத்துக்கள் குறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுகவுடன் கூட்டணி தொடர்ந்தால் தன்னுடைய தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், கூண்டிற்குள் எத்தனை நாள் சிறை பட்டு கிடப்பது, பாஜக தலைமையில் ஆட்சி நடத்த வேண்டும் என்ற அன்ன்னமலையின் இந்த பேச்சு அதிமுகவில் உள்ள தலைவர்களை கொதிப்படைய செய்தது, மேலும் இது தொடர்பாக அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி முறியும் நிலை ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இதனிடையே கூட்டணி குறித்து அண்ணாமலை தனது டெல்லி பயணத்திற்கு பிறகு கூறும் போது கூட்டணி குறித்து மேலிடம் பார்த்து கொள்ளும் என கூறிய நிலையில், நேற்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான அமித்ஷா கூறும் போது, தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், தமிழகத்தை பொறுத்த வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தொடர்வதாக கூறியது கூட்டணி குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அமித்ஷா கூறியதை வைத்து பார்க்கும் போது வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கும் என்று உறுதிபட தெரிகிறது, இருந்தாலும் அரசியலில் எதுவேண்டுமானாலும் எப்போதும் நடைபெறலாம் என்பதால் தேர்தல் நடைபெறும் சமயத்தில் என்ன மாதிரி முடிவை அதிமுக எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்